புல்வாமா தாக்குதலை போல மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 16 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்த நிலையில் பாதுகாப்பு படை வீரர்கள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் வெடிக்கச் செய்துள்ளனர். இதில் 16 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இதனையடுத்து குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது. முன்னதாக நேற்று பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு தீவைத்து மாவோயிஸ்டுகள் எரித்துள்ளனர். இன்று காலை சாலை கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 25 வாகனங்களையும் மாவோயிஸ்டுகள் அடித்து நொருக்கியள்ளனர். இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.