மும்பையில், 7 வருடங்களாகக் காதலித்து வந்தும் திருமணம் செய்துகொள்ள மறுத்த 42 வயது காதலனின் பிறப்புறுப்பை, 25 வயது இளம்பெண் கத்தியால் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"கல்யாணம் பண்ணிக்கோ" என்று சொன்னதைக் கேட்காததால், ஆத்திரமடைந்த 25 வயது இளம்பெண் ஒருவர், தனது 42 வயது காதலனின் பிறப்புறுப்பைக் கத்தியால் அறுத்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை சாண்டாக்ரூஸ் கிழக்கு, கலினா பகுதியைச் சேர்ந்த 25 வயதுப் பெண்ணுக்கும், 42 வயது நபருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாகத் தொடர்பு இருந்து வந்துள்ளது. அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அந்த நபர் திருமணத்திற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
திட்டமிட்ட தாக்குதல்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகத் தனது வீட்டிற்கு வருமாறு காதலனுக்கு அந்தப் பெண் அழைப்பு விடுத்துள்ளார். விருந்து முடிந்து வியாழக்கிழமை அதிகாலை இருவருக்கும் இடையே மீண்டும் திருமணப் பேச்சு எழுந்துள்ளது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த அந்தப் பெண், மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலனின் பிறப்புறுப்பை அறுத்துள்ளார்.
படுகாயமடைந்த அந்த நபர், ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து தப்பித்துத் தனது சகோதரருக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அவர் வி.என். தேசாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் நடவடிக்கை
இதுகுறித்து வாகோலா (Vakola) போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்துதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.


