Asianet News TamilAsianet News Tamil

"சஞ்சய் தத்தை ஏன் விடுதலை செஞ்சீங்க?" - மராட்டிய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிமன்றம்

mumbai HC questions about sanjay dutt release
mumbai HC questions about sanjay dutt release
Author
First Published Jun 13, 2017, 9:15 AM IST


மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை முடியும்முன்பே நடிகர் சஞ்சய் தத் ஏன் விடுதலை செய்யப்பட்டார், யார் அவரின் நடத்தை சரியாக இருக்கிறது என முடிவு செய்தது, எதற்காக முன்கூட்டியே விடுதலை செய்தீர்கள் என மஹாராஷ்டிரா அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளது.

கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத் சட்டவிரோதாக ஆயுதங்கள் வைத்து இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் சோதனையிட்டதில் ஏ.கே. 56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கை துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன. 

இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு மும்பை தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. எனினும் தண்டனை காலத்தை 5 ஆண்டுகளாக குறைத்தது. 

ஏற்கெனவே வழக்கு விசாரணையின் போது 18 மாதங்கள் சஞ்சய்தத் சிறைதண்டனை அனுபவித்து இருந்தார். இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், மீண்டும் ஏரவாடா சிறையில் 2013, மே மாதம் அடைக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் 90 நாட்கள் பரோலும், 30 நாட்கள் பரோலிலும் சஞ்சய் தத் வெளியே வந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிய 8 மாதங்கள் முன்பாகவே சஞ்சய் தத் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புனேவை சேர்ந்த பிரதீப் பலேகர் என்பவர் மும்பை நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சாவந்த் மற்றும் சாதனா ஜாதவ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் மஹாராஷ்டிரா அரசை கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.

நடிகர் சஞ்சய் தத் நன்னடத்தை உள்ளவர் என்று எந்த அடிப்படையில் முடிவு செய்தீர்கள் என்பது குறித்து மாநில அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

சிறை துறை டி.ஐ.ஜி., அல்லது சிறை கண்காணிப்பாளர் சஞ்சய் தத் நன்னடத்தை குறித்து மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினார்களா.? பின் எப்படி சஞ்சய்தத் நடத்தை சரியானது, நன்னடத்தை உள்ளவர் என அதிகாரிகள் முடிவுக்கு வந்தார்கள்.

சஞ்சய்தத் நன்னடத்தை உள்ளவர் என்பதை எப்போது அவர்கள் கண்டுபிடித்தார்கள்?, .அவர் பரோலில் வெளியே சென்றபோதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கு அடுத்த ஒருவாரத்துக்கு பின் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios