அசாம் ஸ்ஸாம் மாநில எம்.பியும், பிரபல முஸ்லிம் தலைவர்களில் ஒருவருமான பத்ருதீன் அஜ்மல், கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய நிருபரை, 'மண்டையை உடைத்து விடுவேன்' என மிரட்டல் விடுத்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜ்மல் எம்பியும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான இவர், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அசாம் மாநிலம், தெற்கு சல்மாரா மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற அஜ்மல், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது உள்ளூர் 'டிவி' சேனல் செய்தியாளர் ஒருவர், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என கேள்வி எழுப்பினார். அதற்கு அஜ்மல் பட்டும் படாமலும்,' டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம்' என்றார்.

அடுத்து அந்த  செய்தியாளர், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அதற்கு ஏற்றவாறு முடிவுகளை மாற்றிக் கொள்வீர்களா என கேட்டார்.

இதில் ஆவேசமடைந்த அஜ்மல்,' நீ எவ்வளவு கோடி கொடுப்பாய்? இது தான் பத்திரிகை தர்மமா? பத்திரிகை துறையின் புகழை உங்களை போன்றவர்கள் தான் கெடுக்கின்றனர். இந்த ஆள் இதற்கு முன் கூட எங்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார்' என ஆவேசமாக பேசினார்.
மேலும், ஆத்திரம் தணியாத அவர், மற்றொரு செய்தியாளரின் மைக்கை பிடுங்கி, கேள்வி கேட்டவரை தாக்க முயன்றார்.  எவ்வளவு பணத்துக்கு நான் பாஜகவுக்கு விலை போய் விட்டேன் என இவன் கேட்கிறான். இவன் தந்தை தான் விலைக்கு போவான்.

இங்கிருந்து போய்விடு விடு. இல்லாவிட்டால் உன் மண்டையை உடைத்து விடுவேன். போ, என் மீது போலீசில் புகார் கொடு. நீதிமன்றத்தில் எனக்கு ஆட்கள் இருக்கின்றனர். நீ தொலைந்தாய். எனக்கு எதிராக இதற்கு முன் செயல்பட்டவன் தானே நீ ஆவேசத்துடன் கூச்சலிட்டார்.
இதை பார்த்ததும், அருகில் இருந்த கட்சி பிரமுகர் கள்,சம்பந்தப்பட்ட நிருபர் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதன் பிறகு அந்த நிருபர், நான் கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள். மன்னித்து விடுங்கள்' என வருத்தம் தெரிவித்தார். அத்துடன் அஜ்மல் முன் தலையை தாழ்த்தினார்.

உடனே அஜ்மல் அவரது தலையை தொட்டு மன்னிப்பு வழங்கினார். பின்னர் நிருபர் கூறுகையில்,' நான் உட்பட அனைத்து நிருபர்களையும் அடித்து உதைத்து இருப்பார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, வற்புறுத்தலின் பேரில் மன்னிப்பு கேட்டேன். இப்பிரச்னை குறித்து போலீசில் புகார் அளித்து விட்டேன்' என்றார்.