வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் பாராளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மாநிலங்களவையில், இந்த 3 மசோதாக்களும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. மசோதாக்களை தாக்கல் செய்து வேளாண் துறை அமைச்சர் நரேந்திர தோமர் உரையாற்றியபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

3 மசோதாக்களையும் தேர்வு குழுவுக்கு அனுப்பக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், மசோதாக்களின் நகலையும் எரித்தனர். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது. 

திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் அவைத்தலைவரின் இருக்கை பகுதிக்கு சென்று முழக்கங்களை எழுப்பினார். அவரை முன்னேறி வர வேண்டாம் என அவைத் தலைவர் கூறினார். அவைத்தலைவரின் உதவியாளரும் டெரிக் ஓ பிரனை தடுத்து நிறுத்த முற்பட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை  பிற்பகல் 1.41 வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் அவை கூடியது.

மாநிலங்களவையில், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதத்தை கடுமையாக விமர்சித்துள்ளார், பாஜக மாநிலங்களவை எம்பி ராஜீவ் சந்திரசேகர். இதுகுறித்து டுவீட் செய்துள்ள ராஜீவ் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகளாக இருந்துவருகிறேன். ஆனால் இன்றைய தினம் நடந்ததைபோன்ற இழிவான, வன்முறையான நடத்தைகளை நான் இதுவரை கண்டதில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த சில எம்பிக்கள் நடந்துகொண்ட விதமும், அவை துணைத்தலைவரிடம் நடந்துகொண்ட விதமும் அறுவெறுக்கத்தக்கது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.