கர்நாடகாவில் இன்று மேலும் 5007 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85870ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 லட்சத்து 33 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் தொடக்கத்திலிருந்தே பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், இவற்றிற்கு அடுத்த இடத்தில் தற்போது கர்நாடகா உள்ளது. கர்நாடகாவில் இந்த மாநிலங்களைவிட பரவல் தீவிரம் அதிகமாக இருக்கிறது. 

கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்துவரும் நிலையில், இன்று இரண்டாவது நாளாக 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நேற்று கர்நடகாவில் 5030 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று சுமார் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 5007 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85,870ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒருநாளில் பெங்களூருவில் மட்டும் 2267 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பெங்களூருவில் பாதிப்பு எண்ணிக்கை 41467ஆக அதிகரித்துள்ளது. 30 ஆயிரம் பரிசோதனையில் 5000க்கும் அதிகமான பாதிப்பு என்பது மிகமோசமானது. கர்நாடகாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்திருக்கிறது என்பதையே இது உணர்த்துகிறது. எனவே தமிழ்நாட்டை போல பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

கர்நாடகாவில் இன்று 114 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1724ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் 833 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.