ஆந்திராவில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 10,093 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,20,390ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்துவிட்டது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்துவருகிறது. 

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை எட்டப்போகிறது. தமிழ்நாட்டில் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியிலும் கொரோனா பாதிப்பு கடுமையாக இருக்கிறது. கர்நாடகாவில் தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் உறுதியாகிவருகின்றன. 

இந்நிலையில், ஆந்திராவில் இன்று உறுதியான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, அம்மாநிலத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று ஒரேநாளில் 10,093 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,20,390ஆக அதிகரித்துள்ளது. 

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 55,406 பேர் குணமடைந்துவிட்ட நிலையில், 63771 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று ஆந்திராவில் 64 உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 1213ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இன்று ஒரேநாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டது, அம்மாநில மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.