Modis constructive philosophy with US President Trump has failed

தீவிரவாதி ஹபீஸ் சயத் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டாரே. அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான மோடியின் கட்டிப்படி தத்துவம் தோற்றுவிட்டதோ? என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

தீவிரவாத தலைவர்

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயித் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

வீட்டுச் சிறை

ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்கவும் ஹபீஸ் சயித்தை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்த்தன. மேலும், பாகிஸ்தானுக்கு அமெரிக்க கொடுத்த அழுத்தம் காரணமாக, கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல் லாகூரில் ஹபீஸ் சயித் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்.

குற்றச்சாட்டு

இந்நிலையில், கடந்த24-ந்தேதி ஹபீஸ் சயித்தை வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சுதந்திரமாக வெளியே வந்த ஹபீஸ் சயீத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வராமல் இருப்பதற்கும், வீட்டுக்காவலில் தான் வைக்கப்பட்டதற்கும் இந்தியாவும், அமெரிக்காவும்தான் காரணம் என்று பேசினார்.

கட்டிப்படித் தத்துவம் தோற்றுவிட்டதா?

இதற்கிடையே ஹபீஸ் சயித் விடுதலை குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பிரதமர் மோடியை கிண்டல் செய்து கருத்து பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில், “ நரேந்திர மோடி அண்ணா, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் வீட்டுச்சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தான் ராணுவத்தை அதிபர் டிரம்ப் இப்போதுதான் துண்டித்தார். அதிபர் டிரம்பு உடனான உங்களின் ‘கட்டிப்பிடி’தத்துவம் தோற்றுபோய்விட்டதா?. மோடி-டிரம்ப் இடையே அவசரமாக கட்டிப்பிடிக்க வேண்டியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.