மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள 1,500 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில், 3 மாதங்களில் 27,397 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவில் பதிவு முறையின் லாகின் ஐடி ஹேக் செய்யப்பட்டு இந்த மாபெரும் மோசடி அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், வெறும் 3 மாதங்களில் 27,397 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே வெறும் 1,500 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது மாநிலத்தின் மிகப்பெரிய பிறப்புச் சான்றிதழ் மோசடியாகக் கருதப்படுகிறது.

சிறப்பு ஆய்வு

யவத்மால் மாவட்டம் ஆர்னி தாலுகாவிலுள்ள ஷெந்துருசானி (Shendurusani) கிராம பஞ்சாயத்தில், செப்டம்பர் முதல் நவம்பர் 2025 வரையிலான காலத்தில் தாமதமான பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளைச் சரிபார்க்கும் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, அந்த சிறிய கிராமத்தின் மக்கள் தொகையை விட பல மடங்கு அதிகமாகப் பிறப்புப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யும் சிவில் பதிவு முறையின் (Civil Registration System - CRS) பாதுகாப்பு வளையம் தகர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

போலிப் பதிவுகள்

கிராம பஞ்சாயத்தின் லாகின் ஐடி (Login ID) மும்பையில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, யாரோ ஒரு அதிநவீன சைபர் குற்ற கும்பல் இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி போலிப் பதிவுகளைச் செய்துள்ளது.

இந்தக் கணக்கில் பதிவான 99 சதவீதப் பெயர்கள் மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடையது என்று பா.ஜ.க மூத்த தலைவர் கிரித் சோமையா தெரிவித்துள்ளார்.

உயர்மட்ட விசாரணை

இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், ஜில்லா பரிஷத் முதன்மை நிர்வாக அதிகாரி மந்தர் பட்கி இது குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளார்.

"இந்த முறைகேடு குறித்து முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் பேசியுள்ளேன். சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து பிறப்புச் சான்றிதழ்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்," என கிரித் சோமையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏன் இந்த மோசடி?

போலி அடையாள அட்டைகளை உருவாக்கவும், அரசு நலத்திட்டங்களின் பலன்களை முறைகேடாகப் பெறவும் போலி பிறப்புச் சான்றிதழ்கள் பயன்படுத்தப்படலாம். அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும் இந்தச் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது, இது தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.