Modi vs Ragul

யாருக்கு ‘வாய்ஸ்’ இருக்குனு பார்க்கலாமா?...வாரணாசியில் மோடி, ராகுல் போட்டிபோட்டு பிரசாரம் 

உ.பி. மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று வீதி, வீதியாக சென்று போட்டா போட்டி பிரசார ஊர்வலத்தில் ஈடுபட்டனர். தொண்டர்கள் திரண்டு நின்று அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உச்ச கட்ட பிரசாரம்

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றன. நேற்றுடன் 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன.

7-வது இறுதி கட்ட தேர்தல் 8-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால், உ.பி.யில் தற்போது உச்ச கட்ட பிரசாரம் நடந்து வருகிறது.

வாரணாசியில்

உ.பி.யில் கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சியில் இல்லை. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது.

அதனால், இந்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் பா.ஜனதா முழு மூச்சுடன் களம் இறங்கி உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி மக்களவை தொகுதியில் நேற்று அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

வீதி, வீதியாக..

வாரணாசியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க காசி விஸ்வநாதர் மற்றும் கால பைரவர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்கினார்.

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் இருந்து தொண்டர்கள் புடை சூழ, வீதி வீதியாக அவர் பிரசாரம் தொடங்கினார்.

ஆரவார கோஷம்

சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்து ஆரவாரமான உற்சாக வாழ்த்து கோஷங்களை முழங்கினார்கள்.

80 சதவீதத்துக்கும் அதிகமான இந்துக்களை கொண்ட வாரணாசியில் நேற்று எங்கு பார்த்தாலும் காவி வண்ண தோரணங்கள் கட்டப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது.

ராகுல் காந்தி

பிரதமர் மோடிக்கு போட்டியாக நேற்று வாரணாசியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக பங்கேற்ற ஊர்வலமும் நடைபெற்றது.

ஏறத்தாழ 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின்போது இரு கட்சி தொண்டர்களும் தலைவர்களை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.

விழாக்கோலம்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் வாரணாசி மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள ேராஹனியா சட்டமன்ற தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

இதனால் வாரணாசி மக்களவை தொகுதியில் இடம் பெற்றுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளும் விழாக்கோலம் பூண்டு இருந்தன.

கோவில்களில் வழிபாடு

நடத்திய பிரதமர் மோடி

பிரதமர் மோடி நேற்று வாரணாசியில் பிரசாரம் தொடங்குவதற்கு முன்பாக, புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் கால பைரவர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

இது குறித்த தனது ‘டுவிட்டர்’ பதிவில், ‘‘பாபா விஸ்வநாத் கோவிலுக்குச் சென்றதையும், கால பைரவர் கோவிலில் தரிசனம் செய்ததையும அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்’’ என்று மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.

பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தனது பிரசாரத்தின்போது இது பற்றி குறிப்பிட்டு, ‘‘மோடி கோவிலுக்குச் செல்வதால் பா.ஜனதாவுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவது இல்லை’’ என கூறி இருந்தார்.