Modi vs Mayawathi

பிரசாரத்தில் கூட்டம் சேர்க்க ஆள்பிடித்த… மோடி…கிண்டல் செய்யும் மாயாவதி 

பிரதமர் மோடியின் வாரணாசி பிரசாரத்துக்கு வெளி மாநிலங்கள் மற்றும் உ.பி.யின் வெளி மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் அழைத்து வரப்பட்டு இருப்பதாக, மாயாவதி கூறினார்.

குதூகலம்

வாரணாசியின் புறநகர்ப்பகுதியான ரோஹன்யா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது-

‘‘மோடியின் வாரணாசி ஊர்வலத்துக்கு திரளான தொண்டர்கள் குவிந்ததாக பா.ஜனதா கட்சியினர் குதூகலம் அடைகிறார்கள்.

அழைத்து வரப்பட்டவர்கள்

எனக்குத் தெரிந்தவரை, பிரதமரைப் பார்க்க வந்தவர்கள் அனைவரும், உ.பி.யில் ஏற்கனவே தேர்தல் முடிந்த மாவட்டங்களில் இருந்தும், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் அழைத்து வரப்பட்டவர்கள்தான்.

மத்தியில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் அனைவரையும் மோடியின் வாரணாசி தொகுதிக்கு பா.ஜனதா கட்சியினர் வரவழைத்து இருக்கிறார்கள். வெளியிடங்களில் இருந்து தொண்டர்களை அழைத்து வருவதில் அவர்கள் தங்கள் சக்தியை வீணடித்து இருக்கிறார்கள்.

உள்ளூர் மக்கள்

ஆனால், உண்மையில் ஓட்டு அளிக்கப்போவது உள்ளூர் மக்கள்தான். இங்கே எங்கள் பொதுக்கூட்டத்தில் பெரிய அளவில் மக்கள் திரண்டு இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் இந்த தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதன் மூலம் பகுஜன் சமாஜ் கட்சிக்குத்தான் உண்மையான மக்கள் ஆதரவு உள்ளது என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே உ.பி.யில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது பகுஜன் சமாஜ் கட்சிதான்.

2, 3-வது இடம்

காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்திருப்பது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜனதாவும், காங்கிரஸ்-சமாஜ்வாதியும் போட்டி போட்டுக்கொண்டு ஊர்வலம் செல்வது, இரண்டு, 3-வது இடம் யாருக்கு என்பதை முடிவு செய்வதற்குத்தான்.

தப்பித்தவறி பா.ஜனதா ஆட்சிக்கு வந்துவிட்டால் இட ஒதுக்கீடு என்பதே இல்லாமல் போய்விடும்’’.

இவ்வாறு மாயாவதி கூறினார்.