modi Talk about violence against Dalits
புனே நகரில் தலித் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து பிரதமர் மோடி மவுனம் கலைத்து கருத்துக் கூற வேண்டும் என்று தலித் தலைவரும், குஜராத் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
200-வது ஆண்டு விழா
கடந்த மாதம் 31-ந்தேதி புனே நகரில் பீமா கோரிகான் 200-வது ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். மேலும், பஸ்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
கலவரம்
கடையடைப்பு போராட்டமும் நடந்தது. தலித் அமைப்புகளுடன் போலீசார் நடத்திய பேச்சுக்கு பின் கடையடைப்பு போராட்டம் கைவிடப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
வழக்குப்பதிவு
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசிய தலித் தலைவரும், குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி, டெல்லி ஜே.என்யூ மாணவர் அமைப்பு தலைவர் உமர்காலித் மீது புனே போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதவி செய்துள்ளனர்.
அனுமதி மறுப்பு
மேலும், மும்பையில், பேரணி நடத்த ஜிக்னேஷ் மேவானிக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில், தலித் அமைப்புத் தலைவர் ஜிக்னேஷ் ேமவானி, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
ஏன் மவுனம்?
மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே, மும்பையில் தலித் மக்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார்? அவர் வாய் திறந்து தனது நிலைப்பாட்டை கூற வேண்டும். வகுப்புவாதத்தை தூண்டிவிட்டதாகவும், மக்களை பிளவு படுத்தும் வகையில் பேசியதாகவும் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அச்சப்படுகிறது
பா.ஜனதா கட்சி என்னைப் பார்த்து அச்சப்படுகிறது. குஜராத் தேர்தலில் நான் வென்றுவிட்டேன், அவர்கள் பல இடங்களில் தோல்வி அடைய காரணமாக இருந்ததால், அவர்கள் என்னை குறிவைக்கிறார்கள். என்னுடைய பேச்சில், ஒரு வார்த்தை கூட மக்களை பிளவுபடுத்தும் வகையில், தூண்டும் வகையில் இருக்காது.
உரிமை இல்லையா?
சாதி இல்லாத இந்தியாதான் எங்களுக்கு வேண்டும். பீமா கோரிகான் 200-வது நினைவு நாளில் தலித் அமைப்புகள் அமைதியாக பேரணி நடத்த உரிமை இல்லையா?. தலித் மக்கள் மீதும், சிறுபான்மையினர் மீதும்நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக வரும் 9-ந்தேதி இளைஞர் பெருமை என்று பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் இளம் தலைவர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
