குஜராத் மாநிலம், சூரத் நகரில் பிரதமர் செல்லும் சாலையின் குறுக்கே திடீரென்று வந்த 4  வயது குழந்தையைப் பார்த்த மோடி, தனது காரை நிறுத்தி அந்த குழந்தை அழைத்து கொஞ்சினார்.

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். சூரத் நகரில் ேநற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி டெல்லிக்குச் செல்ல பலத்த பாதுகாப்புடன் விமானநிலையம் சென்றார். அப்போது, பிரதமர் மோடியைப் பார்க்க சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரளாக நின்று வரவேற்பு அளித்தனர்.

அப்போது, சாலையின் குறுக்கே 4 வயது குழந்தை திடீரென ஓடி வந்து, மோடி வரும் பாதை அருகே நின்றது. இதைப் பார்த்த பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அந்த குழந்தையை தூக்கி கொண்டு செல்ல முயன்றனர்.

இதைப் பார்த்த பிரதமர் மோடி, பாதுகாவலரிடம் காரை நிறுத்துமாறு கூறினார். பின், அந்த குழந்தையை தன்னிடம் அழைத்து வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, அந்த குழந்தையை பிரதமர் மோடியிடம் கொண்டு சென்றனர், குழந்தை தூக்கி கொஞ்சிய பிரதமர் மோடி, தனது மடியில் அமரவைத்து, உன்  பெயர் என்ன? எனக் கேட்டார். அதற்கு அந்த குழந்தைநான்சி கான்டெய்லியா என்றார்.

அந்த குழந்தை கையில் சிறிய பொம்மை கடிகாரம் கட்டி இருந்தது. அதைப் பார்த்த பிரதமர் மோடி, இப்போது மணி என்ன ஆகிறது? என்று கேட்க, அந்த குழந்தை சிரித்தது.

அந்த குழந்தையின் கன்னத்தை பிடித்து கிள்ளி கொஞ்சிவிட்டு கீழே இறக்கிவிட்டார். இதைப் பார்த்த மக்கள் மோடியை வாழ்த்தி கோஷமிட்டனர்.

பாதுகாப்பு காரணங்களைக் கண்டு கொள்ளாமல், குழந்தையை அழைத்து கொஞ்சிவிட்டு சென்ற பிரதமர் மோடியின் செயலை அனைத்து மக்களும் பாராட்டினர்.