- Home
- இந்தியா
- பாஜகவின் புதிய தலைவராகிறார் நிதின் நபின்.. வேட்புமனு தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
பாஜகவின் புதிய தலைவராகிறார் நிதின் நபின்.. வேட்புமனு தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் என முக்கியமான சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இளம் வயதுடைய நிதின் நபின் பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பாஜகவின் புதிய தேசியத் தலைவர்
பாஜகவின் புதிய தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் பிற மூத்த தலைவர்கள் முன்னிலையில் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
பாஜக அலுவலகத்தில் மூத்த தலைவர்கள்
இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜி.கிஷன் ரெட்டி, மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
நிதின் நபின் வேட்புமனு தாக்கல் செய்தார்
பாஜகவின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின், தேசியத் தலைவர் பதவிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அவரைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் நிதின் நபின் பாஜகவின் புதிய தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். வேட்புமனு தாக்கல் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
புதிய தேசியத் தலைவர் நிதின் நபின்?
வேட்பாளர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம். தேசிய தேர்தல் அதிகாரி மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் அறிக்கை வெளியிடுவார். நிதின் நபினுக்கு தற்போது 45 வயது. இவர் டிசம்பர் 14, 2025 அன்று தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது, ஜே.பி. நட்டாவுக்குப் பிறகு இவரை தேசியத் தலைவராக்க கட்சி முடிவு செய்துள்ளது.
இளம் வயது பாஜக தலைவர் என்ற பெருமை
இதன்மூலம் பாஜக தேசியத் தலைவர் பதவியை வகிக்கும் மிக இளம் வயது தலைவர் என்ற பெருமையை நிதின் நபின் பெற உள்ளார். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் என முக்கியமான சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இளம் வயதுடைய நிதின் நபின் பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

