- Home
- Tamil Nadu News
- ஆசிரியர் கண்ணன் மரணத்துக்கு திமுக அரசே காரணம்.. முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த பாஜக, தவெக!
ஆசிரியர் கண்ணன் மரணத்துக்கு திமுக அரசே காரணம்.. முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த பாஜக, தவெக!
தமிழக அரசுக்கு எதிராக போராடிய ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக அரசே காரணம் என்று பாஜக, தவெக ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆசிரியர் மரணம்
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெரம்பலூரை சேர்ந்த கண்ணன் என்பவர் பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
இந்த நிலையில், ஆசிரியர் கண்ணன் மரணத்துக்கு திமுக அரசே காரணம் என்று பாஜக, தவெக ஆகிய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து 6-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் என்பவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்கின்றன.
விளம்பர நாடகம் போடும் முதல்வர் ஸ்டாலின்
"உங்க கனவ சொல்லுங்க" என விளம்பர நாடகம் போடும் முதல்வர் ஸ்டாலின் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடிய ஆசிரியர் கண்ணன் வாழ்நாள் கனவிற்கு செவிமடுக்காமல் போனதன் விளைவு தான் இந்த துர்மரணம். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி
ஆட்சிக்கு வந்தவுடன் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வதாகப் போலி வாக்குறுதியளித்த திமுகவினை நம்பி இத்தனை ஆண்டுகள் காத்திருந்த ஆசிரியர் கண்ணன் இறுதியில் தற்கொலை முடிவை எடுத்திருப்பது ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி.
திமுகவின் அப்பட்டமான நம்பிக்கை துரோகத்திற்கு நம்மில் ஒருவரை மீண்டுமொருமுறை நாம் இழந்திருக்கிறோம். இப்படிப்பட்ட கொடூர ஆட்சியை ஒழித்தால் மட்டுமே, கடந்த ஐந்து ஆண்டுகளில் அகால மரணமடைந்த அப்பாவி ஆன்மாக்கள் சாந்தியடையும்'' என்று கூறியுள்ளார்.
சத்தியம் செய்தீர்களே
இதேபோல் தவெக கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், ''ஆசிரியர் கண்ணன் மறைவுக்கு யார் பொறுப்பு மாண்புமிகு முதல்வர் அவர்களே? ஆட்சிக்கு வரும் அவசரத்தில், தேர்தல் அறிக்கையில் வரிசை எண் 181-ல் என்ன சொன்னீர்கள்? "பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்று சத்தியம் செய்தீர்களே!
இதுதான் சமூக நீதியா?
நம்பி வாக்களித்தார்கள்... நான்கு ஆண்டுகள் பொறுத்திருந்தார்கள்... இறுதியில் ரோட்டில் இறங்கிப் போராடினார்கள். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? பணி நிரந்தர ஆணையைத் தருவதற்குப் பதிலாக, அவர்களைக் குற்றவாளிகளைப் போல மண்டபத்தில் அடைத்து வைத்தீர்கள்! வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமர்ந்தவர்கள், நம்பி வந்த ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டதுதான் உங்கள் சமூக நீதியா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

