கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் என்ற ஜவுளி நிறுவன ஊழியர், அரசு பேருந்தில் ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவியது. இந்த அவதூறால் மன உளைச்சலுக்கு ஆளான தீபக், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் தீபக் (42). ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜனவரி 15ம் தேதி அரசு பேருந்தில் கண்ணூருக்கு சென்றிருந்தார். அப்போது ஒரு பெண் தன்னிடம் அவர் பாலியல் சீண்டல் செய்வதாக செல்ஃபி வீடியோ ஒன்றை ரகசியமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ வைரலானது. சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஒரு பக்கம் தீபக்கை கடுமையாக திட்டித் தீர்த்தாலும், மறுபக்கம் பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்ததாக தெரிவதாகவும் தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் ஆதரவு கருத்தை தெரிவித்தனர். தனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தீபக் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபக்கின் குடும்பத்தினர் அந்த பெண்ணுக்கு எதிராக புகார் அளித்ததை அடுத்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவன் எந்த தவறும் செய்யாதவன், அதனால்தான் இந்த அவதூறை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை' என்று தீபக்கின் தந்தை சோயி, ஏசியாநெட் நியூஸிடம் வேதனையுடன் கூறினார். தன் மகன் ஒருபோதும் அப்படி ஒரு தவறைச் செய்யமாட்டான் என்றும், கண்ணூரில் இருந்து திரும்பிய பிறகு தீபக் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் தந்தை கூறுகிறார். என்ன ஆனது என்று தாய் கேட்டபோது, ஒன்றுமில்லை என்று கூறியுள்ளான். சமூக ஊடகங்களில் பரவிய அவதூறு பற்றி தங்களுக்குத் தெரியவில்லை என்றும் சோயி கூறினார். அந்தப் பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.


