- Home
- இந்தியா
- வந்தே பாரத் ஸ்லீப்பர் டிக்கெட் கேன்சல் பண்ண போறீங்களா? ஜாக்கிரதை.. காசு மொத்தமா போயிரும்!
வந்தே பாரத் ஸ்லீப்பர் டிக்கெட் கேன்சல் பண்ண போறீங்களா? ஜாக்கிரதை.. காசு மொத்தமா போயிரும்!
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் டிக்கெட் ரத்து செய்வதற்கான விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் RAC வசதி இல்லாததால், பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே கவனமாகத் திட்டமிட வேண்டும்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் உறுதி செய்யப்பட்ட (Confirmed) டிக்கெட்டுகளை ரத்து செய்வது இனி பயணிகளுக்குப் பெரும் சுமையாக மாறப்போகிறது. சாதாரண ரயில்களை விட இந்த ரயிலுக்கான ரத்து விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
டிக்கெட் ரத்து கட்டணம்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டண விவரங்கள் இதோ:
• டிக்கெட் எடுத்த உடனே: நீங்கள் டிக்கெட் எடுத்த சிறிது நேரத்திலேயே ரத்து செய்தாலும், கட்டணத்தில் 25% தொகை பிடித்தம் செய்யப்படும்.
• 72 முதல் 8 மணி நேரம் வரை: ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், கட்டணத்தில் பாதி (50%) பணம் பறிபோகும்.
• 8 மணி நேரத்திற்கும் குறைவாக: ரயில் புறப்பட 8 மணி நேரமே இருக்கும்போது டிக்கெட்டை ரத்து செய்தால், ஒரு ரூபாய் கூட உங்களுக்குத் திரும்பக் கிடைக்காது. பொதுவாக மற்ற ரயில்களில் 4 மணி நேரத்திற்கு முன்புதான் 'சார்ட்' (Chart) தயாரிக்கப்படும். ஆனால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் 8 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் தயாரிக்கப்படுவதால், இந்த 8 மணி நேர விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரண ரயில்களுக்கும் புதிய விதிகள்
சாதாரண ரயில்களில் (Express/Superfast) ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால், ஏசி வகுப்பிற்கு ஏற்ப 120 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை மட்டுமே நிலையான கட்டணமாகப் பிடிக்கப்படும். ஆனால், வந்தே பாரத் ஸ்லீப்பரில் எடுத்த உடனே ரத்து செய்தாலும் 25% பணத்தை இழக்க நேரிடும்.
மேலும், சாதாரண ரயில்களில் உள்ளது போல இதில் RAC (Reservation Against Cancellation) வசதி கிடையாது. இந்த ரயிலில் பயணம் செய்ய உறுதி செய்யப்பட்ட (Confirmed) டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.
குறைந்தபட்ச பயணக் கட்டணம்
• பயண தூரம்: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் பயணிக்கக் குறைந்தபட்சம் 400 கிலோமீட்டருக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
• முன்னுரிமை ஒதுக்கீடு (Quota): இந்த ரயிலில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு (Duty Pass) மட்டுமே கோட்டா உண்டு. மற்ற எந்தச் சிறப்பு ஒதுக்கீடுகளும் இதில் கிடையாது.
டிக்கெட் ரத்து செய்யும் நேரத்தை ரயில்வே வெகுவாகக் குறைத்துள்ளதால், பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை மிகக் கவனமாகத் திட்டமிட வேண்டியது அவசியம்.

