- Home
- Tamil Nadu News
- சென்னை டூ ராமேஸ்வரம் இனி வெறும் 8 மணிநேரம் தான்.. வந்தே பாரத் ரயில் ரெடி.. சூப்பர் அப்டேட்!
சென்னை டூ ராமேஸ்வரம் இனி வெறும் 8 மணிநேரம் தான்.. வந்தே பாரத் ரயில் ரெடி.. சூப்பர் அப்டேட்!
சென்னை டூ ராமேஸ்வரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் கடந்த மாதம் பச்சைக்கொடி காட்டியது. அண்மையில் சென்னை, ராமேஸ்வரம் வழித்தடத்தில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் புதிய வந்தே பாரத் ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத்
இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே அதிவேகமாகச் செல்லும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு முன்கூட்டியே செல்ல முடியும் என்பதாலும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது.
இதேபோல் சென்னையில் இருந்து தமிழகத்தின் ஆன்மிக தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்துக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.
சோதனை ஓட்டம் முடிந்து ரயில் ரெடி
பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை டூ ராமேஸ்வரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் கடந்த மாதம் பச்சைக்கொடி காட்டியது. அண்மையில் சென்னை, ராமேஸ்வரம் வழித்தடத்தில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் புதிய வந்தே பாரத் ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததால் பொங்கல் பண்டிகைக்கு முன்பு சென்னை டூ ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் அட்டவணை
தமிழகத்துக்கு பொங்கல் பரிசாக பிரதமர் மோடி இந்த ரயிலை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயிலின் தெற்கு ரயில்வேயின் உத்தேச அட்டவணையும் வெளியாகி உள்ளது.
அதாவது சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் 1.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். மறுமார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
ராமேஸ்வரத்துக்கு 8 மணி நேரத்தில் போகலாம்
தற்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 600 கி.மீ தூரத்தைக் கடக்க சுமார் 10.25 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. ஆனால் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வெறும் 8 மணி நேரத்தில் சென்று விட முடியும்.
சென்னை, ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரயிலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் கட்டண விவரங்கள், எத்தனை பெட்டிகள்? என்பது குறித்த விவரங்கள் வெளியாகும்.

