- Home
- இந்தியா
- வந்தே பாரத் ரயிலில் ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய மாணவர்கள்..! முதல்வர் ஷாக்..! விசாரணைக்கு உத்தரவு!
வந்தே பாரத் ரயிலில் ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய மாணவர்கள்..! முதல்வர் ஷாக்..! விசாரணைக்கு உத்தரவு!
எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் தொடக்க விழாவில் பள்ளி மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு பாலக்காடு, கோவை, சேலம் வழியாக வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் தொடக்க விழா எர்ணாகுளத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி, கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
வந்தே பாரத் ரயிலில் ஆர்.எஸ்.எஸ் பாடல்
அப்போது ரயிலில் இருந்த மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கண கீதம் பாடுயது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் தெற்கு ரயில்வே வெளியிட்டது. பொது விழாவில் பள்ளி மாணவர்களை எப்படி ஆர்.எஸ்.எஸ் பாடல் பாட வைக்கலாம்? என கேரள முதல்வர் பினராயி விஜயன், வி.டி.சதீசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயன் கண்டனம்
பினராயி விஜயன் வெளியிட்ட கண்டன பதிவில்''எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவின்போது, மாணவர்கள் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாட வைத்த தெற்கு ரயில்வேயின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. வகுப்புவாத சித்தாந்தம் மற்றும் வெறுப்பைத் தூண்டும் செயல்களுக்குப் பெயர்போன ஒரு அமைப்பின் கீதத்தை ஒரு அரசு நிகழ்வில் சேர்ப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.
ரயில்வே அதிகாரிகள் கீழ்த்தரமான செயல்
ரயில்வே அதிகாரிகள் இந்தக் காணொளியைத் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்ததன் மூலம், தலைசிறந்த தேசிய நிறுவனங்கள் எவ்வாறு சங் பரிவார் அரசியலால் கீழ்த்தரமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஒரு காலத்தில் இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் பெருமைமிக்க அடையாளமாக இருந்த ரயில்வே இப்போது அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் வகுப்புவாத சித்தாந்தத்தை ஊடுருவச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆபத்தான நடவடிக்கையை எதிர்க்க அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கேரள பொதுக் கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் என்று மாநில கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. அரசு நிகழ்வுகளின் போது அரசியல் அல்லது வகுப்புவாத நோக்கங்களை ஊக்குவிக்க மாணவர்களைப் பயன்படுத்துவது அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவதாகும்.
அதிகாரப்பூர்வ விழாவில் மாணவர்களை ஈடுபடுத்துவதில் குறைபாடுகள் இருந்தனவா மற்றும் அரசியல் அல்லது சித்தாந்த நோக்கங்களுக்காக இந்த தளம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து பொதுக்கல்வி இயக்குநர் விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.