அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 2030-ம் ஆண்டுக்குள்  உலகில் உள்ள முதல் 3 நாடுகளுக்குள் இந்தியாவும் இடம் பெறும் என்று திருப்பதியில் நடந்த 104-வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

104-வது மாநாடு

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்டேஸ்வரா பல்கலைக்கழகத்தில் 104-வது இந்திய அறிவியல் மாநாடு நேற்று தொடங்கியது. அதில் நோபல்பரிசு பெற்ற பல நாட்டு அறிவியல் அறிஞர்கள், உள்நாட்டில் இருந்து 14 ஆயிரம் அறிவியல் ஆய்வாளர்கள் பங்கேற்கின்றனர்.

முக்கியத்தலைவர்கள்

ஆந்திரமாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் இ.எல். நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில், பிரதமர் மோடி தலைமை ஏற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது-

சவால்கள்

அடிப்படை அறிவியல் மற்றும் அறிவியல் ரீதியான அனைத்து வகையான கண்டுபிடிப்புகளுக்கும் அரசு ஆதரவு அளிப்பதை கடப்பாடாகக் கொண்டுள்ளது. முக்கிய துறைகளான சுத்தமான, பாதுகாக்கப்பட்ட குடிநீர், எரிசக்தி, உணவு, சுற்றுச்சூழல், காலநிலை, பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் பல சவால்கள் நமக்கு உள்ளன. இந்த சவால்களுக்கு முறியடிக்கும் தொழில்நுட்பங்களுக்கு தடையாக இருப்பவற்றை கவனத்துடன் ஆய்வாளர்கள்  கண்காணிக்க வேண்டும்.

 

எதிர்த்து நிற்பது

கணினி மயமாக்கல், நெட்வொர்க்கிங், மற்றும் செயல்பாடு ஆகியவற்றை கொண்ட ‘சைபர்-பிசிகல் சிஸ்டம்ஸ்’ உலக அளவில் வளர்ந்து வருகிறது. அந்த துறையில் நாம் அதிக கவனம் செலுத்துவது அவசியம். இந்த துறையில் எப்போதும் இல்லாத வகையில் புதிய சவால்கள், நெருக்கடிகள் ஆகிய வந்தாலும் அதை எதிர்த்து நிற்க வேண்டும்.

வாய்ப்பு

ஆய்வு மற்றும் பயிற்சியளித்தல், ரோபாட் தொழில்நுட்பம், செயற்கை மதிநுட்பம், டிஜிட்டல் உற்பத்தி, டேட்டா லிங்க்ஸ், கற்றலில் ஆழ்ந்த முறை, இணையதளம் ஆகியவற்றில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சேவை மற்றும் உற்பத்தித்துறையில் இந்த தொழில்நுட்பகளை பயன்படுத்தி மேம்படுத்துவது அவசியம்.

குறிப்பாக, வேளாண்மை, நீர், எரிசக்தி, போக்குவரத்து மேலாண்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, கட்டமைப்பு, நிதி, குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவற்றில் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

வளர்ச்சி 14 சதவீதம்

வலிமையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கட்டுமானம், புதிய ஸ்ட்ராட் அப் நிறுவனங்கள், தொழிற்சாலை , ஆய்வு மற்றும் மேம்பாடுஆகியவற்று அரசுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அறிவியல் ரீதியான பதிப்புகளை வெளியிடும் விஷயத்தில் இந்தியா உலக அளவில் 6-வது இடத்தில் உள்ளது. உலக சராசரி வளர்ச்சி வீதம் 4 சதவீதம் இருக்கையில் இந்தியாவின் வளர்ச்சி 14 சதவீதமாக இருக்கிறது.

முதல் 3 இடம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வரும் 2030ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள முதல் 3 நாடுகளுக்குள் இந்தியாவும் இடம் பெறும். உலகின் தலைசிறந்த ஆய்வாளர்களுக்கு சிறந்த நாடாக இந்தியா  திகழும்.

வெளிநாடு இந்தியர்கள்

உலகளவில் சிறந்த அறிவியல் அறிஞர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களை, நாம் நமது நாட்டின் நீண்ட கால ஆய்வுகளுக்கு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கிராமங்கள், நகரங்கள் இடையிலான வேறுபாடு, பிரச்சினைகள், முழுமையான வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மக்களின் எதிர்பார்ப்புகளை அறிவியல் நிரப்புவது கட்டாயமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.