அகமது மறைவிற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டம் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தி கொண்டிருந்தபோது, கேரள எம்பி இ.அகமது திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும், மக்களவையில் இருந்த எம்பிக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.15 மணிக்கு காலமானார். எம்பி அகமது மரணமடைந்ததையொட்டி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருந்த பட்ஜெட் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் மறைந்த எம்பி அகமதுவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் தெரிவித்து இருப்பதாவது:-

கடின உழைப்பின் மூலம் தேசத்துக்கு சேவை செய்த மூத்த அரசியல் தலைவர் அகமது. அவர், மேற்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்த முக்கிய பங்கு வகித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.