இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் விமானத்தை துரத்திச் சென்று சுட்டுவீழ்த்திய இந்திய விங் கமாண்டர் அபி நந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார். சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்தது.

அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று இம்ரான்கான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து நேற்று இரவு  9 மணியளவில் பாகிஸ்தான் அதிகாரிகள் தமிழக வீரர் அபினந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், நடந்த நிகழ்ச்சியில், பிஜேபி  தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளால், பயங்கரவாதிகள் மனதில் அச்சம் ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு பின், தற்போதைய ஆட்சியில் தான், பயங்கரவாதிகள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடந்த அதிபயங்கரத் தாக்குதலை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான் கண்டிக்கவில்லை; அப்படியிருக்கையில், அவரை எப்படி நம்ப முடியும்? பாகிஸ்தான், பிடியில் சிக்கிய விமானி அபிநந்தன், வெறும் இரண்டே நாட்களில் தாயகம் திரும்பியுள்ளது, இது தான் மோடி அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி.

இந்திய ராணுவ வீரர்களின் தியாகங்களை அரசியலாக்குவதாக, பிஜேபி மீது, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பின், 21 எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்ததில் நிறைவேற்றப்பட்டதீர்மானம்தான், பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என இவ்வாறு அமித்ஷா பேசினார்.