கருப்பு பணத்துக்கு எதிராக பிரதமர் மோடியின் சர்ஜிகல் ஸ்டிரைக் தொடர் நடவடிக்கையின் அடுத்த அதிரடியாக, உள்நாட்டில் தங்கம் வைத்திருக்க கட்டுப்பாடுகளை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

கடந்த 8-ந்தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ1000 நோட்டுகளை பிரதமர் மோடி செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தங்கம் இறக்குமதிக்கு அரசு கட்டுப்பாடுகள் விதிக்கலாம் எனக் கருதி நகை விற்பனையாளர்கள் ஏராளமான தங்கத்தை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர். இதனால், கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் இறக்குமதி அதிகரித்தது.

உலகிலேயே தங்கம் இறக்குமதியில் சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. ஆண்டுக்கு 1,000 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. அதில் மூன்றில் ஒரு பகுதி, அதாவது 350 டன்தங்கம் கருப்பு பணத்தின் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது.

மேலும், மக்களும் அரசை ஏமாற்றி வரிசெலுத்தாமல் சேர்த்துவைத்துள்ள பணத்தையும் இதுபோல் தங்கமாக வாங்கிக் குவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே, கருப்புபணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒருபகுதியாக உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக உயர்மதிப்பு கொண்ட மஞ்சள் உலோகமாக தங்கத்துக்கும் கட்டுப்பாடுகளை கொண்டு வர மோடி அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்து கேட்டபோது, நிதியமைச்சக அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.