டிஜிட்டல் பரிமாற்றத்தை மக்களிடையே ஊக்குவிக்கும் வகையில், வங்கியில் சேமிப்பு கணக்கில் இருந்துகூட குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக பணம் எடுத்தால் அதற்கு வரி விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் வரும் பிப்ரவரி முதல் தேதி தாக்கலாகும் 2017-18ம் நிதியாண்டு பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் சாதகமான அம்சங்கள், பாதகமான அம்சங்கள் குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த திட்டத்தின் படி, வங்கிச் சேமிப்புக்கணக்கு அல்லது எந்த விதமான கணக்கு வைத்து இருக்கும் ஒருவர் குறிப்பிட்ட அளவுக்கு பணத்தை எடுத்தால் அதற்கு வரி விதிக்கப்படும்.
இந்த திட்டம் குறித்து நன்கு அறிந்த மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பணத்துக்கு வரி விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய வரியின் நோக்கம் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி, மக்களை டிஜிட்டல்பரிமாற்றத்துக்கு மாறச் செய்வதுதான். இதற்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாத பட்ஜெட்டில் வரலாம். அதற்கான வாய்ப்பு இருக்கிறது '' என்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்தபின், மத்திய அரசு மக்களிடையே டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க தீவிர முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இதுவும் அமையும்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகையில், “ கருப்புபணத்தை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு அளித்த பரிந்துரையில், தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 3 லட்சத்துக்கு அதிகமாக ரொக்கமாக பரிமாற்றம் செய்யத் தடை விதிக்க வேண்டும் என்றும், தனிநபர் ஒருவர் ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்க தடையும் கொண்டு வர வேண்டும் என பரிந்துரை செய்தது'' என்றார்.
அதுமட்டுமல்லாமல், பார்த்தசாரதி ஷோம் தலைமையிலான வரி நிர்வாக சீரமைப்பு ஆணையம் அளித்த பரிந்துரையில், மீண்டும் வங்கி பணப்பரிமாற்ற வரியை கொண்டு வர வேண்டும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின் நாட்டில் டிஜிட்டல் பரிமாற்றம் அளவு நவம்பரில் இருந்த அளவைக் காட்டிலும் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து அதிகப்படுத்தவும், மக்கள் மத்தியில் டிஜிட்டல் பரிமாற்றத்தை முழுமையாகக் கொண்டு, பணப்பரிமாற்றத்தை கட்டுப்படுத்தவும் மத்தியஅரசு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST