பள்ளி சிறுமி கற்பழிப்பு வழக்கில் லாலு கட்சி எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் எம்எல்ஏ பிரசாத் யாதவ். கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆறாம் தேதி ஒரு பள்ளி சிறுமியை கற்பழித்து விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு, உறுதுணையாக இருந்ததாக சுலேகா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த சிறுமியிடம் ஆசையாக பேசி, தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று உள்ளார். அப்போது தான், எம்எல்ஏ இந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்து உள்ளார். 

அப்போது சிறுமியை மது அருந்த வைத்து அவரை கற்பழிப்பு செய்து பின்னர் அந்த சிறுமி கிளம்பும்போது கையில் பணத்தையும் கொடுத்து அனுப்பியுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சுலேகா உள்பட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த எம்எல்ஏ இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக அவரை கைது செய்து,அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 

ஜாமீன் கேட்டு முறையீடு செய்து இருந்த எம்எல்ஏ விற்கு, 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம், இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. அதன்பின் ஜாமீனை ரத்து செய்து அதே ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. பின்னர் எம்எல்ஏ கோர்ட்டில் சரணடைந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த மூன்றாம் தேதி முடிவடைந்து,15 ஆம் தேதியன்று, எம்எல்ஏ உள்பட 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது தனி கோர்ட். அதன்படி பிரசாத் யாதவ் எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தொடர்புடைய சுலேகா மற்றும் ராதா தேவி என்ற இரண்டு பெண்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஆறு பேருக்கும் ரூபாய் 60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏ குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அதற்கான தண்டனையை நீதிமன்றம் வழங்கி உள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.