ஒடிசாவில், இறந்ததாகக் கருதப்பட்ட 86 வயது மூதாட்டியை அவரது குடும்பத்தினர் தகனம் செய்ய எடுத்துச் சென்றனர். தகனத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவர் உயிருடன் இருப்பதைக் கண்டறிந்த தகன மைய மேலாளர், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இறந்ததாகக் கருதப்பட்ட 86 வயது மூதாட்டி ஒருவர், தகனம் செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உயிரோடு இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம், ஒடிசா மாநிலம் புரி நகரில் உள்ள ஸ்வர்கத்வார் தகன மையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சம் மாவட்டத்தில் உள்ள போல்சாரா கிராமத்தைச் சேர்ந்த பி. லக்ஷ்மி என்ற 86 வயது மூதாட்டி, கடந்த ஆறு மாதங்களாக கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திங்கள்கிழமை காலை மூதாட்டியிடம் எந்தவித அசைவும் இல்லாததால், அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் கருதினர். மருத்துவரை அணுகாமல், மூதாட்டியின் உடலை இறுதி சடங்குகளுக்காக புரி நகரில் உள்ள ஸ்வர்கத்வார் தகன மையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மெதுவாகத் துடித்த இதயம்
தகன மையத்தின் மேலாளர் பிரஜகிஷோர் சாஹு, மூதாட்டியின் உடலை ஆய்வு செய்யச் சென்றபோது, அவர் கண்களை இமைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் மூதாட்டியின் அருகே சென்று காதை வைத்து இதயத்துடிப்பைக் கேட்டார். மூதாட்டியின் இதயம் மெதுவாகத் துடித்துக் கொண்டிருந்தது.
உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து, மூதாட்டியை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு (DHH) அனுப்பி வைத்தார். குடும்பத்தினர் மூதாட்டிக்கு இறப்புச் சான்றிதழ் கொண்டு வராததால், மேலாளர் பிரஜகிஷோர் சாஹு, உடலை ஆய்வு செய்ய வேண்டியிருந்தது.
"குடும்பத்தினர் இறப்புச் சான்றிதழ் கொண்டு வராததால், நான் உடலை ஆய்வு செய்யச் சென்றேன். அப்போது அவர் இமைப்பதைக் கண்டேன். காதை வைத்துப் பார்த்தபோது, இதயத்துடிப்பு கேட்டது. உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, அவரை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்," என்று சாஹு கூறினார்.
மருத்துவனைக்குச் செல்லவில்லை
மூதாட்டியின் உறவினர் பி. தர்மேந்திரா கூறுகையில், "அவர் கடந்த ஆறு மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். திங்கள்கிழமை காலை அவர் அசைவற்று இருந்ததால், அவர் இறந்துவிட்டதாக நினைத்தோம். மருத்துவரை அணுகாமல், தகனம் செய்ய எடுத்து வந்துவிட்டோம். இப்போது, அவரது சிகிச்சைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்," என்று தெரிவித்தார்.
மாவட்ட தலைமை மருத்துவமனையில் மூதாட்டியைப் பரிசோதித்த மருத்துவர் மகாவீர் பிரசாத் தாஸ், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற அறிவுறுத்தினார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
