பந்தாவான வெளிநாட்டு சொகுசு கார், கடுமையான போலீஸ் பாதுகாப்பு ஆகியவற்றோடுதான் ஒரு நாட்டின் தூதர் எங்கேயும் செல்வார்கள். ஆனால், இந்தியாவுக்கான மெக்சிக்கோ தூதர் மெல்பாபிரியா(வயது58) தனது அதிகாரப்பூர்வ வாகனமாக ஆட்டோரிக் ஷாவை பயன்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்.
டெல்லியில் எங்கு சென்றாலும் தனி ஆளாக தனது அதிகாரப்பூர்வ வாகனமான ஆட்டோவில்தான் பயணிக்கிறார், அவருடன் எந்த பாதுகாப்பு அதிகாரியும் கிடையாது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அந்த ஆட்டோவில் ஆங்காங்கே மெக்சிக்கோ மக்களுக்கான வண்ண ஓவியங்கள், கொடிகள் என ஆட்டோவை தங்கள் நாட்டுக்கே உரிய பாணியில் அலங்கரித்து வைத்துள்ளார் தூதர் பிரியா.

அவரிடம் ஏன் ஆட்டோவை அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்துகிறீர்கள் என கேட்டபோது அவர் கூறியது.
“ நான் இந்தியாவுக்கான தூதராக வருவதற்கு முன், இந்தியாவின் பல இடங்களுக்கு செல்ல ஆட்டோவைத்தான் பயன்படுத்திவந்தேன். எந்த இடத்துக்கு சென்றாலும் ஆட்டோவில்தான் செல்வேன். நான் தூதராக நியமிக்கப்பட்டபின், ஏன் நமது அதிகாரப்பூர்வ வாகனமாக ஆட்டோவை பயன்படுத்தக்கூடாது என யோசித்தேன். லட்சக்கணக்காண இந்திய மக்கள் ஆட்டோவை பயன்படுத்தும் ஒரு தூதர் ஏன் பயன்படுத்தக்கூடாது என சிந்தனை உதித்தது'' என்று தெரிவித்தார்.
லட்சக்கணக்கான மதிப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பி.எம்.டபில்யு, பென்ஸ் ரக செடான் எஸ்.யு.வி கார்களை பெரும்பாலான வெளிநாட்டு தூதர்கள் விரும்பும் நிலையில், பிரியா சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சி.என்.ஜி. கியாஸ் பொருத்தப்பட்ட ஆட்டோவை வாகனமாகப் பயன்படுத்தி வருகிறார்.
“ நாம் சுவாசிக்கும் காற்றும் சுத்தமாகவும், ஏற்றக்கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதற்காகவே இதுபோன்ற சிறிய ரக வாகனங்களைப் பயன்படுத்தி, அதில் இயற்கைக்கு கேடுவிளைவிக்காத இயற்கை எரிவாயுவை எரிபொருளாகப் பயன்படுத்துகிறேன். இதன் மூலம் டெல்லியில் என்னால் முடிந்த அளவு காற்று மாசுபாட்டை குறைக்க முடியும். இதற்காக இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் இருந்து ஆட்டோ பயன்படுத்த சிறப்பு அனுமதி பெற்று இருக்கிறேன்'' என்கிறார் ப்ரியா

டெல்லி குறித்து பிரியா கூறுகையில், “ டெல்லியும் நான்பிறந்த மெக்சிக்கோ சிட்டியும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருக்கிறது.அதனால்,தான் நான் டெல்லியை நான் பிறந்த மண் போல் உணர்கிறேன். இந்திய கலாச்சாரமும் எனக்கு நன்கு பிடித்து விட்டதால், எனக்கு இங்கு வாழ்வதில் சிறிதும் பயம் ஏதும் இல்லை. மெக்சிக்கோவில் நான் மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன் என்றாலும் டெல்லியில் தனியாக வசிக்கிறேன். ஆனால், டெல்லி மக்களை நான் எனது குடும்பத்தினர்களாகப் பார்க்கிறேன்'' என்கிறார்

இந்த ஆட்டோவின் டிரைவர் ராஜேந்திர குமார் சபாரி சூட், கோட் சூட், காலில் ஷீ என பார்ப்பதற்கு மிரட்சியான தோற்றத்தில் இருந்தாலும், அவர் தூதருக்கான ஆட்டோவைத்தான் ஓட்டுகிறார். சாலையில்,செல்வோர் என்னய்யா கோட் சூட் போட்டுகிட்டு ஆட்டோ ஓட்டுகிறார் என ஒரு மாதிரியாகத்தான் அவரை பார்க்கிறார்கள் என்று ராஜேந்திர குமார் தெரிவிக்கிறார்.
