உத்தரப்பிரதேசம் மாநிலத் தலைநகர் லக்னோவில் நேற்றுமுன்தினம் தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயிலின்  முதல்நாள் வர்த்தக சேவை பயணிகளுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

மெட்ரோ ரெயில் கதவு திறக்காததால், ஏறக்குறைய ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பயணிகள் சிக்கி அவதிப்பட்டனர். அதன்பின் அவசர வழியாக அனைவரும் மீட்கப்பட்டனர்.

லக்னோவில் 8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் ரூ. 6 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரெயில்வே சேவையை நேற்றுமுன்தினம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்து சோதனை ஓட்டம் நடந்தது.

இந்தநிலையில், வர்த்தகரீதியான போக்குவரத்து நேற்று தொடங்கியது. மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்காக ஏராளமான  பயணிகள் ரெயில் நிலையத்தில் வரிசையில் காத்திருந்தனர். இதில் சார்பார்க் ரெயில் நிலையத்தில் இருந்து டிரான்ஸ்போர்ட் நகர் வரை செல்லும் ரெயிலில் காலை நேரத்தில் ஏராளமான பயணிகள் பயணித்தனர்.

ரெயில் சென்று கொண்டு  இருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறால், துர்காபுரி மற்றும் மவாயையா ரெயில் நிலையங்களுக்கு இடையே திடீரென நின்றது. அப்போது, ரெயிலில் உள்ள ஏ.சி.யும், மின் விளக்கும் இயங்காததால், பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். 

இது குறித்து லக்னோ மெட்ரோ ரெயில் கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அமித் குமார் வஸ்தவா நிருபர்களிடம் கூறுகையில், “ காலை 7.15 மணி அளவில் புறப்பட்ட மெட்ரோ ரெயில் தொழில்நுட்ப கோளாறால் திடீரென  தொழில்நுட்ப கோளாறால், துர்காபுரி மற்றும் மவாயையா ரெயில் நிலையங்களுக்கு இடையே திடீரென நின்றது.

அதில் இருந்த கதவு திறக்கப்படாமல் மூடிக்கொண்டதால் வௌியே வரமுடியாமல், 100-க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கிக் கொண்டனர். அதன்பின் மெட்ரோ ரெயில் தொழில் நுட்ப பணியாளர்கள், ஊழியர்கள் வந்து சரி செய்து, அவசரவழிக் கதவு மூலம் பயணிகளை பத்திரமாக மீட்டனர். பயணிகள் அனைவரும் டிரான்ஸ்போர்ட் நகர் ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இனி வரும் காலங்களில் மெட்ரோ ரெயிலில் இதுபோன்ற தொழில்நுட்ப குறைபாடு ஏற்படாமல் பராமரிக்கப்படும் என்று பயணிகளுக்கு உறுதி அளித்து இருக்கிறோம். கோளாறு ஏற்பட்ட ரெயில் டிரான்ஸ்போர்ட் நகர் பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது’’ என்றார்.

மெட்ரோ ரெயிலில் முதல்நாளில் ஆர்வமாக  பயணிக்க வந்த  பயணிகள் திடீரென ரெயிலில் மாட்டிக்கொண்டதால் மற்ற சற்று அதிர்ச்சி அடைந்தனர்.