Megalaya BJP leader resigned

இறைச்சிக்காக சந்தைகளில் மாடு விற்பனை செய்ய மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர் ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த வருடம (2018) சட்டசபை தேர்தல் வருகிறது. மேகாலயா மாநிலத்தின் காரோ மலைப் பகுதியை சேர்ந்தவர் பெர்னார்டு மாரக். இவர் அப்பகுதி பா.ஜ.க. மாவட்ட தலைவராக உள்ளார்.

மேகாலயாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் மக்களுக்கு குறைந்த விலையில் மாட்டிறைச்சி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று பெர்னார்டு வாக்குறுதி அளித்தார். பெர்னார்டின் இந்த பேச்சு அக்கட்சியினரிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனிடையே, பசு, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை சந்தைகளில் இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசின் மாடு விற்பனை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தலைவர் பெர்னார்டு கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். ஏனெனில் முதலில் நான் ஒரு கிறிஸ்தவன் மற்றும் காரோ. பா.ஜ.க. மாட்டிறைச்சி விவகாரத்தில் எங்களது உணர்வுகளை புண்படுத்துகிறது. பழங்குடியின மக்களுக்கு என தனி சட்டதிட்டங்கள் உள்ளன. பழங்குடி மக்கள் மீதுபா.ஜ.க. இந்துத்துவா கொள்கைகளை திணிக்க முயற்சிக்கிறது” என்றார்.

இறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.