இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. கொரோனாவிலிருந்து நாட்டை காக்க, தடுப்பூசி தான் பேராயுதமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 18 வயது பூர்த்தியான அனைவருமே தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் சில இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாட் நிலவுகிறது. மத்திய அரசு தடுப்பூசி தட்டுப்பாடுகளை போக்கி, அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கிடையே, மார்ச் மாதத்திற்கு பிறகு மத்திய அரசு புதிதாக தடுப்பூசி ஆர்டர் எதுவும் கொடுக்கவில்லை என்று தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் நிலையில், புதிதாக தடுப்பூசி ஆர்டர் எதுவும் மத்திய அரசு கொடுக்கவில்லை என்று வெளியான தகவல் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து தெளிவுபடுத்த மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீரம் நிறுவனத்திடம் கோவிஷீல்டு தடுப்பூசி 100 மில்லியன் டோஸ் மற்றும் பாரத் பயோடெக் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் 20 மில்லியன் டோஸ் கோவேக்ஸின் என்றளவில் கடந்த மார்ச் மாதம் கொடுக்கப்பட்ட ஆர்டர் தான் மத்திய அரசு கொடுத்த கடைசி ஆர்டர். அதன்பின்னர் தடுப்பூசிக்கு புதிய ஆர்டர் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல்.

மே, ஜூன், ஜூலை மாத தடுப்பூசி தேவைக்காக, 11 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கடந்த ஏப்ரல் 28ம் தேதி சீரம் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதற்காக ரூ.1732.50 கோடி முன் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல 5 கோடி டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசிக்கான ஆர்டர், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் அதே ஏப்ரல் 28ம் தேதி கொடுக்கப்பட்டு அதற்காக ரூ.787.50 கோடி முன் தொகை செலுத்தப்பட்டிருக்கிறது.

இவ்வாறு மத்திய அரசு தடுப்பூசி தேவையை கருத்தில்கொண்டு புதிய ஆர்டர்கள் கொடுத்திருக்கும் நிலையில், புதிய ஆர்டர்கள் எதுவுமே கொடுக்கப்படவில்லை என்று பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. 

நேற்று(மே 2) வரை, மாநில அரசுகளுக்கு, 16.54 கோடி தடுப்பூசி டோஸ்களை விலையில்லாமல் வழங்கியிருக்கிறது மத்திய அரசு. இன்னும் 56 லட்சம் தடுப்பூசி டோஸ்களை மாநில அரசுகள் இன்னும் 3 நாட்களில் பெறும் என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.