Married women have no place in the colleges - the governments new rule sparks controversy

தெலங்கானா மாநிலத்தில், அரசு சார்பில் இயங்கும் உண்டு, உறைவிட கல்லூரிகளில்(ரெசிடென்டல்) திருமணமான பெண்களுக்கு இடம் வழங்கப்படாது, மணமாகாத பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்ற புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

23 கல்லூரிகள்

தெலங்கானா அரசு சார்பில் பெண்களுக்கான 23 உண்டு, உறைவிட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகள் அனைத்தும் தெலங்கானா நல உறைவிட கல்வி நிலைய அமைப்பு சார்பில் தெலங்கானா அரசின் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது.

சர்ச்சை அறிவிப்பு

இதற்கிடையே தெலங்கானா நல உறைவிட கல்வி நிலைய அமைப்பு நேற்று ஒரு அறிக்கையை வௌியிட்டது. அதில், 2017-18ம் ஆண்டுக்கான உண்டு, உறைவிட கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவிகள் சேர்க்கை தொடங்க உள்ளது.

அதில் விண்ணப்பிக்கும் மாணவிகள் திருமணமாகாத பெண்களாக இருக்க வேண்டும் என அறிவித்தது. இந்த அறிவிப்பால் பெரும் சர்ச்சை உருவானது.

திசை திரும்பலாம்

இது குறித்து தெலங்கானா நல உறைவிட கல்வி நிலைய அமைப்பின் மேலாளர் பி.வெங்கட் பிரபு கூறுகையில், “ உறைவிடக் கல்லூரியில் படிக்கும் திருமணமாண பெண்களோடு, திருமணமாகாத பெண்கள் படிக்கும் போது, அவர்கள் மனது திசைதிரும்ப வாய்ப்பு உள்ளது. திருமணமான பெண்களைப் பார்க்க அவர்களின் கணவர்கள் வருகிறார்கள்.

மேலும் நாள்தோறும் பெண்கள் செல்போனில் கணவர்களுடன் பேசுகிறார்கள். இதைப் பார்க்கும் திருமணமாகாத பெண்கள் மனதும் படிப்பில் கவனம் செல்லாமல் திசை திரும்பி விடக்கூடாது என்ற நோக்கில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

தடுக்கமாட்டோம்

தெலங்கானா நல உறைவிட கல்வி நிலைய அமைப்பின் செயலாளர் ஆர்.எஸ்.பிரவீண் குமார் கூறுகையில், “ மாநிலத்தில் குழந்தை திருமண முறையை உடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த உண்டு, உறைவிட கல்லூரிஅரசால்நடத்தப்படுகிறது.

நாங்கள் திருமணமான பெண்களை இங்கு படிக்க ஊக்கப்படுத்தவில்லை. அதேசமயம், அவர்கள் விண்ணப்பம் செய்து படிக் அனுமதி கோரினால், அவர்களைத் தடுக்கவும் மாட்டோம். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தமாட்டோம், படிக்கும் வாய்ப்பை பறிக்க மாட்டோம்'' எனத் தெரிவித்தார்.

போர்க்கொடி

தெலங்கானா அரசு சார்பில் இயங்கும் ஒரு கல்லூரிகளில் திருமணமான பெண்களுக்கு இடம் அளிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது, இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என மகளிர் நல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.