சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் உள்ள மாரம்மா கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியான சம்பவம் கர்நாடகத்தையே உலுக்கியது.  சுலவாடி மாரம்மா கோவிலை நிர்வகிப்பதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலந்ததாக முதலில் தெரிய வந்தது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகிகள் சின்னப்பி, அவரது மகன் லோகேஷ், மாதேஷ், சமையல்காரர் புட்டசாமி உள்பட 7 பேரை ஹனூர் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது . சாளூர் மடத்தின் தலைமை மடாதிபதியான குருசாமிக்கும், இளைய மடாதிபதியான மகாதேவசாமிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதில்  மாரம்மா கோவில் நிர்வாகத்தை கைப்பற்றி தனது கள்ளக்காதலிக்கு கொடுக்க இளைய மடாதிபதி மகாதேவசாமி விரும்பி உள்ளார்.

சாளூர் மடத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் மற்றும் கோவில் நிர்வாகத்தை கைப்பற்றி காதலிக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இளைய மடாதிபதி மகாதேவசாமி பிரசாதத்தில் விஷம் கலக்க சதி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இளைய மடாதிபதி மகாதேவசாமி மீது ஊழல், பாலியல் புகார் என பல்வேறு புகார்கள் எழவே, மாரம்மா கோவில் முழுவதையும் சின்னப்பி என்பவர்  கவனித்து வந்துள்ளார். வரவு-செலவு கணக்கையும் அவரே நிர்வகித்து வந்துள்ளார். இந்த நிலையில் சாளூர் மடத்திற்கு அடிக்கடி சென்று வந்த அம்பிகா என்பவருடன் இளைய மடாதிபதி மகாதேவசாமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

ஒரு கட்டத்தில் இளைய மடாதிபதி மகாதேவசாமி மாரம்மா கோவில் மேலாளராக தனது கள்ளக்காதலி அம்பிகாவின் கணவர், மாதேசை நியமித்துள்ளார். சிறிது நாட்கள் கழித்து கோவில் மேற்பார்வையாளராக தனது கள்ளக்காதலியான அம்பிகாவை இளைய மடாதிபதி மகாதேவசாமி நியமித்திருக்கிறார்.

அது சின்னப்பி மற்றும் அவருடைய தரப்பினருக்கு பிடிக்கவில்லை. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சின்னப்பியை கோவில் அறக்கட்டளையில் இருந்தும், நிர்வாக பொறுப்பில் இருந்தும் நீக்க கோரி இளைய மடாதிபதியை அவருடைய கள்ளக்காதலி அம்பிகா தூண்டி உள்ளார்.

 அதாவது சின்னப்பியை கோவில் பொறுப்பில் இருந்து முழுவதுமாக அகற்றிவிட்டால், கோவில் நிர்வாகத்தை நாம் முழுமையாக கைப்பற்றி விடலாம் என்றும், அதன்பிறகு நாம் எப்போதும் சந்தோஷமாகவும், உல்லாசமாகவும் இருக்கலாம் என்றும் இளைய மடாதிபதிக்கு அவருடைய கள்ளக்காதலி அம்பிகா ஆசை காட்டி உள்ளார்.

அதன்பேரில் சின்னப்பியை பழிவாங்கவும், அவர் மீது பழி போடவும் இளைய மடாதிபதி, அவருடைய கள்ளக்காதலி அம்பிகா, அவருடைய கணவர் மாதேஷ் ஆகியோர் சதி திட்டம் தீட்டி உள்ளனர்.

அதன்படி கோவில கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரசாதத்தில் விஷம் கலந்துள்ளனர். ஆனால் இந்த விஷயத்தில் அனைவரும் மாட்டிக் கொண்டனர்.

கோவில் நிர்வாகத்தை கைப்பற்றும் பேராசை, கள்ளக்காதல், பழிவாங்கும் நடவடிக்கையால் 15 அப்பாவிகள் பலியாகி இருக்கிறார்கள். பிரசாதத்தில் விஷம் கலந்த சதியில் மடாதிபதி கள்ளக்காதலியுடன் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது