பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூல காரணம், ராணுவமும், பிரதமர் மோடியுமே என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பரிக்கர், ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து சிலர் சந்தேகம் எழுப்பினாலும் இந்தியர்கள் அனைவருக்குமே இதற்கான பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.
மேலும், இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது இந்திய ராணுவமே அன்றி, அரசியல் கட்சிகள் அல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவத் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் நடக்கவே இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துவந்த நிலையில், தாக்குதலுக்கான ஆதாரங்களை வெளியிடுமாறு எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த தாக்குதலை அரசியலாக்குவதாக பாஜக மீது குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
