உண்மையில், சாமானிய மக்களிடம் இருந்து திட்டமிட்டு கொள்ளையடித்தல், சட்டபூர்வமாக களவாடுதல் போல உள்ளது. என பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரை முழுதாக :
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் முடிவைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளைப் பற்றி பேச விரும்புகிறேன்.
கருப்புப் பணம் அதிகரிப்பைத் தடுக்கவும், கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தவும், தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை கட்டுப்படுத்த உதவுவதற்கும் இதுதான் வழி என்று பிரதமர் வாதிடுகிறார்.

அவருடைய நோக்கத்தை நான் மறுக்கவில்லை. பணத்தை மதிப்பிழக்கச் செய்த நடைமுறை மூலம் வரலாற்று நிர்வாகக் கோளாறு நடத்தப்பட்டுள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்றைக்கு நாட்டில் ஒட்டுமொத்தமாக இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்து கிடையாது.
குறுகிய காலத்தில் இது துன்பம் தரலாம் அல்லது கவலை ஏற்படுத்தலாம் என்றாலும், நாட்டின் நீண்டகால நோக்கில் நன்மை தரும் என்று சொல்பவர்களுக்கும் கூட, ஒருமுறை ஜான் கெய்னஸ் கூறியதை - ``நீண்டகால ஓட்டத்தில் நாமெல்லாம் இறந்துவிடுவோம்'' - என்பதை நினைவூட்ட வேண்டியுள்ளது.
எனவே, இரவோடு இரவாக பிரதமரால் நாட்டின் மீது திணிக்கப்பட்ட இந்த முடிவால் சிரமங்களுக்கு ஆளாகியுள்ள சாமானிய மக்களின் குறைகளை கவனத்தில் கொள்வது முக்கியமானது. அனைத்து பொறுப்புகளுடனும் நான் சொல்கிறேன், கடைசியில் என்ன நடக்கப் போகிறது என்பது என்று நமக்குத் தெரியாது.

நாம் 50 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்கிறார் பிரதமர். நல்லது. 50 நாட்கள் என்பது குறுகிய காலம். ஆனால் ஏழைகள் மற்றும் சமூகத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு 50 நாட்கள் வேதனை என்பது பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும்.
அதனால்தான் சுமார் 60 முதல் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம். நடந்துவிட்ட விஷயங்கள் கரன்சி முறையின் மீதும் நமது வங்கி அமைப்புகளின் மீதும் மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்து, அழித்துவிடும்.
வங்கியில் மக்கள் டெபாசிட் செய்யலாம் ஆனால் தங்கள் பணத்தை எடுக்க முடியாது என்று தாம் நினைக்கும் ஏதாவது ஒரு நாட்டின் பெயரை பிரதமர் மூலம் அறிந்து கொள்ள விரும்புகிறேன். நாட்டு மக்களின் பெரிய நன்மைக்காக செய்கிறோம் என்று கூறி, செய்துள்ள செயலை கண்டிப்பதற்கு இது ஒன்றே போதும் என்று நான் நினைக்கிறேன்.
இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட முறையானது நாட்டில் வேளாண்மை வளர்ச்சியை, சிறு தொழில் துறையை பாதிக்கும், பொருளாதாரத்தில் அமைப்புசாரா துறைகளில் உள்ள அனைத்து மக்களையும் பாதிக்கும் என்று என்னுடைய கருத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாட்டின் வருமானம், அதாவது GDP, இதனால் 2 சதவீதம் வரை குறையும் என்று தனிப்பட்ட முறையில் நான் கருதுகிறேன்.
இதுகூட குறைவான மதிப்பீடு தானே தவிர, அதிகமானதல்ல. எனவே, சாதாரண மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை தடுக்கும் வகையில் இந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பதற்கு பிரதமர் சில ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
வங்கி நடைமுறையில் தினந்தோறும் விதிகள் மாற்றப்படுவதும், மக்கள் பணம் எடுப்பதற்கான நிபந்தனைகள் மாற்றப்படுவதும் நல்லதல்ல. பிரதமரின் அலுவலகம், நிதியமைச்சரின் அலுவலகம் மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் மிக மோசமான செயல்பாட்டை காட்டுவதாக இது இருக்கும்.

பாரத ரிசர்வ் வங்கி இந்த அளவுக்கு குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். அது முழுக்க நியாயமானது என்றே நான் நினைக்கிறேன். எனவே, இதுபற்றி நிறைய நான் கூறப்போவதில்லை. அதிக பெரும்பான்மையாக உள்ள மக்களின் துயரங்களை அகற்றும் வகையில், நடைமுறை சாத்தியமான, உறுதியான வழிகளை முன்வைக்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்துகிறேன்.
நமது மக்களில் 90 சதவீதம் பேர் அமைப்புசாரா துறைகளில் உழைப்பவர்கள். 55 சதவீத தொழிலாளர்கள் வேளாண்மைத் துறையில் துயரத்தில் இருப்பவர்கள். கிராமப் பகுதிகளில் பெருமளவு மக்களுக்கு சேவை அளிக்கும் கூட்டுறவு வங்கிகள் செயல்படவில்லை. ரொக்கத்தை கையாள அவற்றுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

எனவே, இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் முறையானது வரலாற்று நிர்வாகக் கோளானது என்று நான் கருதுவதற்கு இவை போதுமானவையாக உள்ளன. உண்மையில், சாமானிய மக்களிடம் இருந்து திட்டமிட்டு கொள்ளையடித்தல், சட்டபூர்வமாக களவாடுதல் போல உள்ளது.
இந்தப் பக்கம் செய்வதில் அல்லது அந்தப் பக்கம் செய்வதில் குறைகளைக் காண்பது எனது நோக்கமல்ல. தாமதமாகிவிட்டாலும் இதை பிரதமர் ஆய்வு செய்து, மக்களின் கஷ்டங்களைப் போக்குவதற்கான, நடைமுறை சாத்தியமான உறுதியான வழிகளைக் காண்பார் என்று நம்புகிறேன்.
