டெல்லியில் இருந்து தெலங்கானா ஆந்திரா வரை கிடுக்கிப்பிடிக்கு தயாராகிறதா சிபிஐ? நடுக்கத்தில் அரசியல் புள்ளிகள்!!
மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா வீடு மற்றும் 20 இடங்களில் சிபிஐ என்று சோதனை மேற்கொண்டது.
இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்து சிபிஐ இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த நிலயியோ, மணீஷ் சிசோடியா மற்றும் 15 பேர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதில் முதல் குற்றவாளியாக மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த சோதனை குறித்து தனக்கு எந்த பயமும் இல்லை என்று மணீஷ் சிசோடியா நேற்று தெரிவித்து இருந்தார்.
நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி கடந்தாண்டு நவம்பர் 17ஆம் தேதி கொண்டு வரப்பட்டா கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி டெல்லியில் 849 மதுபானக் கடைகள் கடைகள் அமைக்க அரசு அனுமதி அளித்து இருந்தது. பணம் படைத்த முதலாளிகளுடன் இணைந்து விதிமுறைகளை மீறி பதுபானக் கடைகளை அமைப்பதற்கு உரிமம் வழங்கியதாகவும், கொரோனாவை காரணமாகக் காட்டி, உரிமக் கட்டணத்தில் ரூ. 144.36 கோடிக்கு கலால் துறை விலக்கு அளிக்கப்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Manish Sisodia: Kejriwal : கெஜ்ரிவால் புகழ் வளர்ந்தால் மோடிக்கு பொறுக்காதே! ஆம்ஆத்மி விளாசல்
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக தொடரப்பட்ட மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராக ஐதராபாத்தைச் சேர்ந்த அருண் ராமச்சந்திர பிள்ளையின் பெயரையும் சிபிஐ வெள்ளிக்கிழமை குறிப்பிட்டு இருந்தது.
முதல் தகவல் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர்களுக்கு விஜய் நாயர் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பண ஆதாயம் அடைவதற்காக Indospirit நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமீர் மகேந்திரனை அருண் ராமச்சந்திர பிள்ளை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், தெலுங்கானா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் மற்றும் தொழில்துறை அதிபர்கள் சிலர் டெல்லியில் மதுபானக் கடைகள் அமைப்பதற்கு பெரிய அளவில் முதலீடு செய்து இருப்பதாகவும் சிபிஐ சோதனைகளில் தெரிய வந்துள்ளது.
தற்போது தலைநகரம் டெல்லியில் செய்யப்பட்ட சோதனை தென்னிந்தியா வரை நீளும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் சிபிஐ மட்டுமின்றி அமலாககத்துறையும் களத்தில் இறங்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
டெக்கான் க்ரானிக்கல் பத்திரிகை நடத்திய விசாரணையில், தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தனது பினாமிகளின் பெயரில் முதலீடு செய்துஇருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், மருந்து மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் முன்னிலையில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் அதிக எண்ணிக்கையிலான மதுபானக் கடைகளை அமைத்து இருப்பது வெளியாகியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த மகுந்தா குடும்பம், பல ஆண்டுகளாக மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனமும் மகுந்தா அக்ரோ பார்ம் என்ற பெயரில் மதுபானக் கடைகளை எடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
விஜயவாடாவைச் சேர்ந்த மற்றொரு முதலீட்டாளரான வேமுரி ரகு கிராந்தியும் டெல்லியில் மதுபானக் கடைகள் அமைப்பதற்கு லைசென்ஸ் பெற்றுள்ளார். காங்கிரஸிலிருந்து மாறிய தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்எல்ஏ ஒருவரின் மருமகனுக்கும் மதுபான வியாபாரத்தில் பங்கு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிய நிறுவனங்களை ஒழிப்பதற்காகவும், பெரிய நிறுவனங்கள் மூலம் அதிக ஆண்டு வருமானம் பெறுவதற்காக டெல்லி அரசு வழிவகுத்தது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆண்டு விற்றுமுதல் நுழைவு வரம்பு இரண்டு பெரிய நிறுவனங்களான இந்தோ ஸ்பிரிட் மற்றும் பிரிண்ட்கோ ஸ்பிரிட்ஸ்ஆகியவற்றுக்கு வழங்கி ரூ. 150 கோடி பெற டெல்லி அரசு திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.