மும்பை ரயில் நிலையத்தில் நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு, வாலிபர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் புகாரை அடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியாக செல்லும் பெண்களிடம் தங்க சங்கலி பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்நிகழ்வாக உள்ள நிலையில், தனியாக செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் கடந்த சில தினங்களாக, தனியாக செல்லும் பெண்களின் கையைப் பிடித்து, கட்டி அணைத்து முத்தமிட்ட நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஆனால், மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் வாலிபர் ஒருவர், இளம் பெண்ணை கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துள்ள சம்பவம் மும்பை ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள டர்பே ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இருபது வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் நேற்று டர்பே ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நடந்து வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார். 

இளம் பெண்ணிடம் மிக நெருக்கமாக வந்த அந்த இளைஞர் திடீரென அந்த பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இதனால் அந்த இளம் பெண் அரண்டு போய், அந்த நபரை தள்ளிவிட்டு செல்கிறார். 

ஆனால், அந்த நபரோ எதுவும் நடக்காததுபோல சர்வ சாதாரணமாக அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார். பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண், ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ரயில்வே நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.