கருப்பு பணத்தை ஒழிக்க கடந்த 8-ந்தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இரவு பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்குவங்க முதலமைக்ச்சருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு பேசிய மம்தா, இந்த நடவடிக்கையால் மக்கள் அடைந்துவரும் துன்பத்தை விளக்கி கூறியதுடன், ஜனாதிபதியுடன் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதுபற்றி விரிவாக ஆலோசிக்க நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு வந்த மம்தா பானர்ஜி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், மத்திய அரசின் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி அவர் பல்வேறு கட்சியினருடன் சேர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி இன்று பேரணியாக சென்றார்.

இந்த பேரணியில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, பாஜக கூட்டணி கட்சியான சிவசேன கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்