“முரட்டுத்தனமான சர்வாதிகார அரசியல் ஒழிந்தது” பாஜகவின் தேர்தல் தோல்வி குறித்து மம்தா பானர்ஜி ட்வீட்
கர்நாடகாவில் பாஜக படுதோல்வி அடைந்தது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பதிவில் “ மாற்றத்தை நோக்கி, தீர்க்கமான தீர்ப்பு வழங்கிய கர்நாடக மக்களுக்கு எனது வணக்கங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து "முரட்டுத்தனமான சர்வாதிகார அரசியல் ஒழிக்கப்பட்டது" என்றும் மம்தா கூறியுள்ளார்.
"பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக சக்திகள் வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் விரும்பும் போது, ஆதிக்கம் செலுத்தும் எந்த வடிவமைப்பும் அவர்களின் தன்னிச்சையை அடக்க முடியாது: அதுதான் நாம் தெரிந்துகொள்ள தார்மீக உண்மை. நாளைய பாடம்" என்று பதிவிட்டுள்ளார்.
கர்நாடக தேர்தலில் 114 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வரும் நிலையில் மேலும் 23 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவு தேவையின்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே பாஜகவின் தோல்வியை ஏற்றுக்கொண்ட கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “பாஜகவால் முத்திரை பதிக்க முடியவில்லை, அதே சமயம் காங்கிரஸ் அதை வெற்றிகரமாகச் செய்தது” என்று கூறினார். மேலும் பேசிய அவர் "முடிவுகள் வந்தவுடன் நாங்கள் விரிவான பகுப்பாய்வு செய்வோம். ஒரு தேசிய கட்சியாக, நாங்கள் பகுப்பாய்வு செய்வது மட்டுமல்லாமல், பல்வேறு நிலைகளில் என்ன குறைபாடுகள் மற்றும் எங்கு தவறு நடந்துள்ளது என்பதையும் பார்ப்போம். இந்த முடிவை நாங்கள் எங்கள் முன்னேற்றத்தில் எடுத்துக்கொள்கிறோம்," என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ்! அடுத்த முதலமைச்சர் யார்?