கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ்! அடுத்த முதலமைச்சர் யார்?
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய போது காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் பின்னர் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. அம்மாநிலத்தில் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் 114 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வரும் நிலையில் மேலும் 23 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவு தேவையின்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா - கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இடையே முதலமைச்சர் போட்டிக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் யார் அடுத்த முதலமைச்சர் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இதற்கான விடை நாளை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.