தலைமறைவான மல்லையாவின் கோவா கடற்கரை சொகுசு பங்களா, வரும் 19ம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக, அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் தெரிவித்துள்ளன.

கிங்பிஷர் மதுபான கம்பெனி உரிமையாளர் விஜய் மல்லையா ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடனை வாங்கி கொண்டு, அதனை திருப்பி கொடுக்காமல் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். தற்போது அவர் லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

விஜய் மல்லையா தலைமறைவான பிறகு அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் அவரது சொத்துகளை முடக்கின. கடனை வசூலிக்கும் வகையில் விஜய் மல்லையாவின் சொத்துகளை ஏலம் விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதில், மும்பையில் உள்ள கிங்பிஷர் அலுவலகம், மல்லையாவின் தனி விமானம் ஆகியவற்றை ஏலம் விடும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அவற்றை ஏலம் எடுக்க ஒருவரும் முன்வரவில்லை.

இந்நிலையில் விஜய் மல்லையாவுக்கு கோவாவில் கடற்கரையையொட்டி சொகுசு பங்களா உள்ளது. இந்த சொகுசு பங்களாவை ஏலம் விட வங்கிகள் முடிவு செய்துள்ளன. கோவாவில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையில் அமைந்துள்ள இந்த பங்களா 12 ஆயிரத்து 350 சதுர மீட்டர் பரப்பளவில் அரண்மனை போல காட்சியளிக்கிறது.

இந்த சொகுசு பங்களா விஜய் மல்லையாவின் கொண்டாட்டத்தின் சொர்க்கப்புரியாக இருந்துள்ளது. இங்கு தான் அவர் ஆடம்பர விருந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். இங்கு 5 நாட்கள் தங்கியிருந்த மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ்கெயில் தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இந்த சொகுசு பங்களாவை புகழ்ந்து எழுதியுள்ளார்.

அதில், ‘‘இது மாளிகைகளின் ராஜா. ஜேம்ஸ் பாண்டு, ப்ளேபாயின் மாளிகை. இங்கு வியப்புடன் காண பல உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சொகுசு பங்களாவுக்கான ஏலம் வரும் 19ம்தேதி நடைபெறுகிறது. பங்களாவை ஏலத்தில் எடுக்க பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 6 ஓட்டல் துறை மற்றும் ஒரு ஊடகத்துறையை சேர்ந்த பிரபலங்கள் இந்த சொகுசு பங்களாவை பார்த்து சென்றுள்ளனர். ஆரம்ப விலையாக ரூ.85 கோடியே 29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை விஜய் மல்லையாவின் எந்த சொத்துகளையும் ஏலம் எடுக்க யாரும் ஆர்வம் காட்டாத நிலையில், இந்த சொகுசு பங்களா நிச்சயம் நல்ல விலைக்கு போகும் என்று வங்கிகள் எதிர்பார்த்துள்ளன.