மகாராஷ்டிராவின் மாலேகானில் 2008ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 17 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர், குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மோட்டார் சைக்கிளில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது ரம்ஜான் மற்றும் நவராத்திரி தினத்தன்று நடந்தது.
இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) விசாரித்து வந்தது. பின்னர் 2011 இல் தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது. இது தொடர்பாக பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் சமீர் குல்கர்னி, ராஜா ரஹீர்கர், சுவாமி அம்ரூதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட 7 பேர் மீது சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை மும்பை சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் பிரக்யா சிங் தாக்கூர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். மொத்தமுள்ள, 323 சாட்சிகளில், 130 பேரிடம் விசாரணை முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்
17 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கினை சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி விசாரணை நடத்தி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டிற்கு உரிய ஆதராத்தை வழங்க தவறிவிட்டதாக கூறி அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
