பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதற்காக அரசியல் கட்சிகள் பீகாரில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில், பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம், பீகாரில் நகரங்கள், கிராமங்களில் 2022க்குள் சுமார் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். மருத்துவம், பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கியிருந்தன.

இதில், கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி கடும் சர்ச்சையை கிளப்பியதோடு, எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கும் உள்ளானது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவிற்கான தடுப்பூசி இலவசம் என்பதை தேர்தல் வாக்குறுதியாக கொடுப்பது அபத்தமானது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவந்த நிலையில், மக்களின் கருத்து வேறாக உள்ளது.

பிரஷ்னம் என்ற புதிய கருத்துக்கேட்பு டெக்னாலஜி ஸ்டார்ட் அப்பின் மூலம் 2000 பேரிடம், பாஜகவின் கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி குறித்து 2 கேள்விகள் கேட்கப்பட்டன.

முதல் கேள்வி: கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி பற்றி அறிவீர்களா..?

இரண்டாவது கேள்வி: கொரோனா தடுப்பூசி இலவசம் என்பதை தேர்தல் வாக்குறுதியாக கொடுப்பது பொருத்தமாக இருக்குமா? 

இந்த 2 கேள்விகளும் கேட்கப்பட்டன. அதற்கு, பதிலளித்த 2000 பேரில் 53% பேர் அந்த வாக்குறுதி பற்றி அறிந்திருப்பதாகவும், அவர்களில் 66% பேர் அந்த வாக்குறுதி பொருத்தமானது தான் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 23ம் தேதி(வெள்ளிக்கிழமை) இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.