ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ராணுவ அதிகாரிக்கு, ராணுவ மேஜராக பணியாற்றும் அவரது மனைவி பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் கம்பீரமாக இறுதிமரியாதை செலுத்தியது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

இந்திய விமானப்படையின் விங் கமாண்டராகப் பணியாற்றி வந்தவர் டி.வட்ஸ். இவரது மனைவி குமுத் மோர்கா, ராணுவத்தில் மேஜராகப் பதவி வகித்து வருகிறார். கர்ப்பிணியாக இருந்த மோர்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மனைவியிடம் விடைபெற்று விட்டு கடந்த 15-ம் தேதிக்குப் பணிக்குச் சென்ற டி.வட்ஸ், மீண்டும் திரும்பவே இல்லை. அசாமின் மஜூலித் தீவுப் பகுதியில் வட்ஸ் மற்றும் அவரது சக விமானப்படை விமானி ஜெய் பால் ஜேம்ஸ் ஆகியோர் பயணம் செய்த விமானப்படை ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் இருவரும் மரணமடைந்தனர்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

இந்நிலையில், மேஜர் குமுத் மோர்கா சில தினங்களுக்கு முன் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இப்போது, பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் மோர்கா தனது கணவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

தனது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினருடன், கையில் குழந்தையை ஏந்தியபடி ரா1வ சீருடையில் கணவருக்கு இறுதி மரியாதை செலுத்த அவர் செல்வது போன்ற புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  

இந்த விமான விபத்தில் பலியான ஜெயபால் ஜேம்ஸ்  என்பவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். சென்னை  கிழக்கு தாம்பரத்தில் உள்ள அவரது தந்தை ஜெயபாலை ஏராளமானோர் சந்தித்து துக்கம் விசாரித்து வருகின்றனர்.