பிஜ்னோரில் ஒரு தொழிலதிபரின் வீட்டுப் பணிப்பெண், சமையலறை பாத்திரங்களில் சிறுநீர் கழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில் ஒரு தொழிலதிபரின் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த பணிப்பெண் ஒருவர், சமையலறையில் அருவருப்பான செயலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண், ஒரு கண்ணாடிக் குவளையில் சிறுநீர் கழித்து, அதனை குடும்பத்தினர் பயன்படுத்தும் பாத்திரங்கள் மீது தெளித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை குடும்ப உறுப்பினர் ஒருவர் ரகசியமாகப் பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது நெட்டிசன்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கி இருக்கிறது.

ரகசிய கண்காணிப்பு

தொழிலதிபர் காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், கடந்த பத்து ஆண்டுகளாக அந்தப் பெண் தங்கள் வீட்டில் வேலை செய்து வந்ததாகவும், அவர் மீது நம்பிக்கை வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், சமீபத்தில் அவரது அசாதாரணமான நடவடிக்கைகளை கவனித்த ஒரு குடும்ப உறுப்பினர், அவரை ரகசியமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில், அவரது அருவருப்பான செயலைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புகாரை அடுத்து, நாகினா காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்தனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

"மன்னிக்க முடியாது"

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. பல உள்ளூர்வாசிகள் இந்தச் செயல் "அருவருப்பானது" என்றும் "மன்னிக்க முடியாதது" என்றும் கண்டித்துள்ளனர். சிலர் அந்தப் பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். மற்றவர்கள் அவரது செயல்கள் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டவை என்று கூறுகின்றனர்.

பல ஆண்டுகளாக அந்தப் பெண் மீது வைத்திருந்த நம்பிக்கையை மீறியது அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது. இத்தனை வருடங்களாக ஒரு வீட்டில் வேலை செய்யும் ஒருவர் இப்படி நடந்துகொள்வது வெட்கக்கேடானது; ஆழ்ந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று அப்பகுதி மக்கள் கொதிக்கின்றனர்.