மகாராஷ்டிராவில், கந்துவட்டி கொடுமையால் ரூ.1 லட்சம் கடன் ரூ.74 லட்சமாக மாறியதால், ஒரு விவசாயி தனது சிறுநீரகத்தை கம்போடியாவிற்குச் சென்று விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். கந்துவட்டிக்காரர்களின் கொடுமையால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கந்துவட்டி கொடுமையால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒரு ஏழை விவசாயி, வெளிநாட்டிற்குச் சென்று தனது சிறுநீரகத்தை விற்று கடனை அடைத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பால் பண்ணைத் தொழில்
சந்திரபூர் மாவட்டம் நக் பீட் தாலுகாவிலுள்ள மிந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஷன் சதாசிவ் குடே. இவர் கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வந்தார். தனது குடும்ப வருமானத்தைப் பெருக்க, பால் பண்ணை தொழில் தொடங்கத் திட்டமிட்ட ரோஷன், அதற்காக இரண்டு தனியார் கந்துவட்டிக்காரர்களிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 1 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, அவர் வாங்கிய கறவை மாடுகள் உயிரிழந்தன. அதே சமயம் பயிர்களும் பொய்த்துப் போனதால், அவரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
ரூ. 1 லட்சம் ரூ. 74 லட்சமானது எப்படி?
விவசாயியின் இக்கட்டான சூழலைப் பயன்படுத்திக் கொண்ட கந்துவட்டிக்காரர்கள், சட்டவிரோதமான வட்டி விகிதங்களை விதித்துள்ளனர்.
நாள் ஒன்றுக்கு ரூ. 10,000 வரை வட்டி கேட்கப்பட்டுள்ளது. தவணை தவறினால் அபராதம் என்ற பெயரில் தொகையை உயர்த்தியுள்ளனர். இதன் விளைவாக, அவர் வாங்கிய 1 லட்ச ரூபாய் கடன், வட்டிக்கு வட்டி என ஏறி 74 லட்ச ரூபாயாக உருவெடுத்துள்ளது.
சொத்துக்களை விற்றும் தீராத கடன்
கந்துவட்டிக்காரர்களின் மிரட்டலால் மனமுடைந்த ரோஷன், தனது 2 ஏக்கர் நிலம், டிராக்டர், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் குடும்பத்தின் நகைகளை விற்றுப் பணத்தைக் கட்டியுள்ளார். இருப்பினும், வட்டி தாகம் தீராத கந்துவட்டிக்காரர்கள் மீண்டும் அவரைத் துன்புறுத்தியுள்ளனர்.
அடுத்தகட்டமாக, லட்சுமண் உர்குடே என்பவரிடம் கடன் வாங்க வற்புறுத்தப்பட்டுள்ளார். அவர் 20 நாட்களுக்கு 40% வட்டி என்ற அடிப்படையில் கடன் கொடுத்து, விவசாயியை மேலும் கடனாளியாக்கியுள்ளார்.
கம்போடியாவில் சிறுநீரக விற்பனை
பணம் கொடுக்க வழியில்லாத நிலையில், கந்துவட்டிக்காரர்களில் ஒருவரே சிறுநீரகத்தை விற்கும்படி ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. வேறு வழியின்றி சம்மதித்த ரோஷன், கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
பின்னர் ஒரு ஏஜென்ட் மூலம் கம்போடியா நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அவரது ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டது. இதற்காக அவருக்குக் கிடைத்த 8 லட்ச ரூபாயை வைத்து கந்துவட்டிக்காரர்களின் கடனைச் சற்று குறைத்துள்ளார்.
விவசாயி போராட்டம்
உறுப்பை விற்பது இந்தியாவில் சட்டவிரோதமானது என்பது தெரிந்தும், கந்துவட்டியால் ஏற்பட்ட உயிருக்கு அஞ்சியே இந்த முடிவை எடுத்ததாக ரோஷன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடந்த 4 மாதங்களாக அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய கந்துவட்டிக்காரர்கள், வெளிநாட்டுக்கு அனுப்பிய ஏஜெண்டுகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட சர்வதேச நெட்வொர்க் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


