சென்னையிலிருந்து சபரிமலை சென்ற 11 பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக போலீசார் திருப்பி அனுப்பினர். 

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் ஐயப்ப பக்தர்கள் தீர்ப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது சபரிமலை வரும் பெண்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சென்னையிலிருந்து 50 வயதுக்கு குறைவான 11 பெண்கள் அடங்கிய குழு சபரிமலை வந்தது. அவர்கள் அனைவரையும் பம்பையில் பக்தர்கள் வழிமறித்தனர். இதனையடுத்து பெண்கள் அனைவரும் போலீசார் பாதுகாப்பை நாடினர். இதனால் அப்பகுதியில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டது. பெண்களை தடுத்து போராட்டம் நடத்திய ஐயப்ப பக்தர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.  

இதனையடுத்து அந்த பெண்கள் மீண்டும் சபரிமலை நோக்கி செல்ல முற்பட்டனர். ஆனால், அங்கிருந்த மற்ற பக்தர்கள் பெண்கள் செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பெண்கள் அறைக்கு திரும்பினர். 

இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதை தடுக்க 11 பெண்களையும் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். 6 பேரை வாகனத்தில் ஏற்றி நிலக்கல்லுக்கு அனுப்பி வைத்ததுடன், மற்றவர்களையும் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழக எல்லை வரையில் பாதுகாப்புடன் அழைத்து செல்லவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.