‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்று வீராவேஷமாகப் பேசி வந்த பாஜகவுக்கு மூன்று மாநில தேர்தல் முடிவுகள் கிலியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மரண பயத்தைக் காட்டிவிட்டது. வட மாநிலங்களில் அசுர பலத்தோடு இருப்பதாக நினைத்து வந்த பாஜகவுக்கு சம்மட்டி அடி கொடுத்துவிட்டது. இதன் காரணமாக வட மாநிலங்களில் தோல்வியிலிருந்து மீள புதிய வியூகங்களை அமைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  

ஒருபுறம் கூட்டணியை வலுப்படுத்துவது, எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பலவீனப்படுத்துவது போன்ற திட்டங்களையும் பாஜக கைவசம் வைத்துள்ளது. ஏற்கனவே பாஜக கூட்டணியிலிருந்து பல கட்சிகள் விலகிவிட்டதால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு வலுவான கூட்டணிகளை உருவாக்குவதும் இந்த வியூகத்தில் அடங்கும். 

இது தவிர ‘மிஷன் 123’ என்ற வியூகத்தையும் பாஜக வகுத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில் இந்த முறை வெற்றி வாய்ப்பு எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் பாஜகவுக்கு எழுந்திருக்கிறது. ஒரு வேளை மண்ணை கவ்வும் நிலை வந்தால், அதை சமாளிக்கும் வகையில் வேறு தொகுதிகளில் வெற்றி பெறும் முயற்சிகளிலும் அந்தக் கட்சி இறங்கியுள்ளது. இதற்காகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த 123 தொகுதிகளில் கவனம் செலுத்தவே ‘மிஷன் 123’ என்ற வியூகத்தைப் பாஜக வகுத்துள்ளது.

 

அந்தத் தொகுதிகளைக் கைப்பற்றும் வகையில் தீவிர கவனம் செலுத்துவது, தொகுதிகளுக்கு புத்துயிர் அளிப்பது போன்ற முயற்சிகளை பாஜக ஈடுபட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவிட்டார். அடுத்த 100 நாட்களில் 20 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அவர் உத்தேசித்திருக்கிறார். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் ஏமாற்றிவிட்டால், அதை ஈடு செய்வதற்கு மேற்கு வங்காளம, அசாம், ஒடிஷா போன்ற மாநிலங்களையே பிரதமர் மோடி அதிகம் நம்பியிருக்கிறார். இதற்காக இந்த மாநிலங்களில் அதிக நாட்கள் பிரச்சாரம் செய்யவும் மோடி திட்டமிட்டிருக்கிறார். 

இளைஞர்கள், பட்டியல் இனத்தவர், பெண்கள் ஆதரவைத் திரட்ட இந்த முறை லோக்கல் பாஜகவினருக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாஜகவின் பிரச்சார பிரிவுகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக முதன் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களை வளைக்கும் முயற்சிகளை முன்னெடுக்கும் பணி பாஜகவின் இளைஞர் அணி பிரிவிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளைச் செய்ய உள்ளார்கள். இதற்காக இந்தப் பிரிவினர் ‘நேஷன் வித் நமோ’ என்ற முழுக்கத்தையும் முன்னிறுத்த உள்ளார்கள்.