கொரோனா தொற்று காரணமாக மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பெங்களூருவில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரித்துக் கொண்டே வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களில் தான் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகா, ஆந்திராவிலும் தற்போது பாதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுவத்துவதற்காக கடந்த 14ம் தேதி முதல் வரும் 22ம் தேதி வரை ஒருவார காலம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் நாளன்று தமிழகத்திலிருந்து இ-பாஸ் பெற்ற வாகனங்கள் கர்நாடக மாநிலத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. ஆனால், அதனை தொடர்ந்து மெல்ல மெல்ல அந்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து உரிய அனுமதி பெற்று கர்நாடக மாநிலம் மற்றும் பெங்களூரு சுற்றுப்புற பகுதிகளுக்கு சென்ற வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மாநில எல்லைப் பகுதியான அத்திப்ள்ளியில் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவம், ரயில் போக்குவரத்து ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் கர்நாடக மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கர்நாடக மாநிலத்தை கடந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வோர் மாநில எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் தங்களது விபரங்களை பதிவு செய்து அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் ஊரடங்கு என்பதால் சரக்கு வாகனங்கள் மட்டுமே சாலைகளில் தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சாலைகள் பெரும்பாலான நேரங்களில் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழக எல்லைப் பகுதியான ஜூஜூவாடியில் தமிழக போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து அதன் பின்னரே தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.