மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார்
M T Vasudevan Nair dies: முதுபெரும் மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் 91 வயதில் புதன்கிழமை காலமானார். ஞானபீடம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மாரடைப்பு காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
பிரபல மலையாள எழுத்தாளரும், ஞானபீட விருது பெற்றவருமான எம்.டி.வாசுதேவன் நாயர் 91 வயதில் புதன்கிழமை காலமானார். மாரடைப்பு காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
எம்.டி. வாசுதேவன் நாயர் கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதயநோய் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை இரவு அவர் காலமானாதாக மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்தது.
எம்டி என்று பிரபலமாக அறியப்பட்ட எம்.டி. வாசுதேவன் நாயர், 9 நாவல்கள், 19 சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். 6 திரைப்படங்களை இயக்கினார். சுமார் 54 திரைக்கதைகளையும் எழுதியுள்ளார். சுமார் 70 ஆண்டுகள் நீடித்த எழுத்துப் பயணத்தில் ஏராளமான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
மறக்கமுடியாத கிறிஸ்துமஸ்! கணவர், குழந்தைகளுடன் கொண்டாடிய நயன்தாரா!
எம்.டி. வாசுதேவன் நாயரின் நாலுகெட்டு என்ற நாவல் மலையாள இலக்கியத்தில் ஒரு உன்னதமான படைப்பாகக் கருதப்படுகிறது. மஞ்சு, காலம், இரண்டாம் இடம் உள்ளிட்ட பல பாராட்டப்பட்ட படைப்புகளையும் எழுதியுள்ளார். எம்.டி. வாசுதேவன் நாயர் மாத்ருபூமி வார இதழின் ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
1995ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருது எம்.டி. வாசுதேவன் நாயருக்கு வழங்கப்பட்டது. கேந்திர சாகித்ய அகாடமி விருது, கேரள சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது, வள்ளத்தோல் விருது, எழுத்தச்சன் விருது, மாத்ருபூமி, ஓ.என்.வி. இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
2005ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது எம்.டி. வாசுதேவன் நாயருக்கு வழங்கப்பட்டது. 2013 இல் மலையாள சினிமாவில் வாழ்நாள் சாதனைக்கான ஜே.சி டேனியல் விருதைப் பெற்றார். 2022 இல், கேரள அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருதான கேரள ஜோதி விருதையும் பெற்றார்.
எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், மலையாள இலக்கியத்தை உலக இலக்கியத்தில் முன்னணிக்குக் கொண்டு வந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவு ஒட்டுமொத்த கேரளாவுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயருக்கு மரியாதை செலுத்தும் விதமாக டிசம்பர் 26, 27ஆகிய இரண்டு நாட்கள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் உட்பட அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கி லாக்கரில் உள்ள பொருள் காணாமல் போனால்... ஆர்பிஐ விதிகள் சொல்வது என்ன?