இல.கணேசன், ஆர்.எஸ்.எஸ், பாஜகவில் நீண்டகாலமாக செயல்பட்டு தனது உறுதியான கொள்கையில் உறுதியாக இருந்தாலும், அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர். மறைந்த முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பலருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர்.
தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், தற்போது நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநருமான இல. கணேசனின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இல.கணேசன் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று லட்சுமி ராகவன் - அலமேலு தம்பதியருக்கு ஒன்பது குழந்தைகளில் ஏழாவது மகனாகப் பிறந்தார். சிறு வயதில் தந்தையை இழந்ததால், அண்ணன்களின் அரவணைப்பில் வளர்ந்தார். இவரது அண்ணன்களான இல.சேஷன், இல.நாராயணன், இல.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆர்எஸ்எஸ் சங்கத்துடன் தொடர்புடையவர்கள். இல.கணேசன் தெலுங்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்.

ஐந்து வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார் இல.கணேசன். 16 வயதில் அரசு ஊழியராகப் பணியில் சேர்ந்தாலும், ஆர்.எஸ்.எஸ் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். 1970-ல் அரசு வேலையை உதறிவிட்டு, ஆர்.எஸ்.எஸில் முழுநேரப் பிரச்சாரகராக தன்னை இணைத்துக் கொண்டார். திருமணம் செய்து கொள்ளாமல், தனது வாழ்க்கையை ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அர்ப்பணித்தார். நாகர்கோவில், நெல்லை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொறுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில அமைப்புச் செயலாளராகவும், பின்னர் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய செயலாளராகவும், தேசிய துணைத் தலைவராகவும், தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016-ல் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 பிப்ரவரி 2023-ல் நாகாலாந்து ஆளுநராக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு, மணிப்பூர் மாநிலத்தின் 17வது ஆளுநராக 27 ஆகஸ்ட் 2021 முதல் 19 பிப்ரவரி 2023 வரை பதவி வகித்தார். மேற்கு வங்காள ஆளுநராக கூடுதல் பொறுப்பில் 18 ஜூலை 2022 முதல் 17 நவம்பர் 2022 வரை பணியாற்றினார். 2021-ல் மணிப்பூர் ஆளுநராகவும், 2023-ல் நாகாலாந்து ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

திருக்குறள், பாரதியார் கவிதைகள், பகவத்கீதை ஆகியவற்றை தினமும் வாசிப்பவர். பாஜகவின் ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியராகவும், ‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பை நடத்தி வந்தார். 2025 மே 24 அன்று இவரது 80வது பிறந்தநாள் (சதாபிஷேகம்) சென்னையில் கொண்டாடப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
2025 ஆகஸ்ட் 8 அன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தவறி விழுந்து தலையில் காயமடைந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 9 முதல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இல.கணேசன், ஆர்.எஸ்.எஸ், பாஜகவில் நீண்டகாலமாக செயல்பட்டு தனது உறுதியான கொள்கையில் உறுதியாக இருந்தாலும், அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர். மறைந்த முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பலருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர். பொதுவாழ்க்கையில் சிறு வழக்குகளில் கூட சிக்காத அப்பழுக்கற்றவர். நெருக்கடி நிலை காலத்தில் தலைமறைவாக இருந்து, இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டவர்.
